அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
🕔 January 1, 2019
– மப்றூக் –
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, அந்த சபையின் தவிசாளர், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து இன்று செவ்வாய்கிழமை பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், இன்று அமுலுக்கு வரும் வகையில் நிந்தவூர் பிரதேச சபைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, கிழக்கு மாகாண நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திசாநாயக கையெழுத்திட்டு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை, நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ. சலீம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக இன்று 01ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி, பிரதேச சபையின் மு.காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் பழிவாங்கலின் அடிப்படையிலேயே அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
அதேவேளை, ‘ஆளுநரே அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து’ எனும் பதாகையினையும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக பாயிஸ் கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே, அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தனக்கான இடமாற்றத்தின் அடிப்படையில், நிந்தவூர் பிரதேச சபையில் இதுவரை கடமைகளை பாயிஸ் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம்