அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்
அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார்.
டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அட்டாளைச்சேனையில் இருக்கின்றார். இதுபோக, ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கெல்லாம் அப்பால், ஏராளமான தருணங்களில் முஸ்லிம் காங்கிரசின் கௌரவத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மானத்தையும் அட்டாளைச்சேனை பாதுகாத்திருக்கிறது.
இவற்றினையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அட்டானைச்சேனைக்கு எந்தளவு முஸ்லிம் காங்கிரஸால் உதவ முடியுமோ அந்தளவுக்கு உதவ வேண்டும்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் மூன்று மாதங்களுக்குள் நகர சபையாக மாற்றுவேன் என்று, ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொதுக் கூட்டமொன்றில் வைத்துக் கூறியிருப்பதால், அதனை ‘தமாஷான’ விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும், ஓர் ஊருக்கு பகிரங்கமாக வழங்கிய வாக்குறுதியொன்றினை போகிற போக்கில் மறந்து விடவும் கூடாது.
எனவே, அட்டாளைச்சேனைக்கு ராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் முயற்சியாக ‘கவுண்டவ்ன்’ (countdown) ஒன்றினை ‘புதிது’ இணையத்தளம் ஆரம்பிக்கிறது.
அதாவது, மேற்படி வாக்குறுதியை அட்டாளைச்சேனைக்கு அமைச்சர் ஹரீஸ் வழங்கியது டிசம்பர் 30ஆம் திகதியாகும். அப்படியென்றால், மார்ச் 30ஆம் திகதிக்குள், அட்டாளைச்சேனை பிரதேச சபையை நகரசபையாக மாற்ற வேண்டும்.
எனவே, மார்ச் 30ஆம் திகதிவரை இருக்கும் தினங்களை, ‘புதிது’ செய்தித்தளம் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.
மேலும், மார்ச் 30ஆம் திகதி வரையில் இந்தச் செய்தியானது, ‘புதிது’ செய்தித்தளத்தின் முகப்புப் பக்கத்தில் முதன்மைச் செய்தியாகவும் காட்சி தரும்.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி
ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியின் ஒலி வடிவம்