பாலமுனை வைத்தியசாலையை வைத்து, இனி யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹக்கீம்

🕔 December 28, 2018
கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாலமுனை வைத்தியசாலை, மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரிய அபிவிருத்திகள் செய்யப்படும். இனி, இந்த வைத்தியசாலையை வைத்து யாரும் அரசியல் செய்யமுடியாது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பாலமுனையில் நிர்மாணிக்கப்படும் சுகாதார சிகிச்சை நிலையத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டிய பின்னர், நடைபெற்ற கூடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறிகையில்;

“பாலமுனை வைத்தியசாலையை குறைசொல்லி அரசியல் செய்தவர்களை நாங்கள் கண்கூடாக கண்டோம். இந்நிலமையை மாற்றுவதற்கு பைசால் காசிம் மேற்கொண்ட உபாயம் நல்லதொரு வழியை சமைத்திருக்கிறது. மாகாண சபையின் கீழுள்ள இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வைத்தியசாலை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்.

சுமார் இரண்டு மாத அரசியல் இழுபறியின் பின்னர் நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் ஆட்சியமைத்துள்ள நிலையில், எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் மூலம் அடுத்த தேர்தலுக்கிடையில் பாரிய அபிவிருத்திகளை செய்யவேண்டிய எதிர்பார்ப்பில் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர்.

குறுகிய காலத்துக்கு மாத்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகள் மூலம் சேவை செய்வதற்கு எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். கட்சியின் மத்திய குழுவுடன் இணைந்து, ஒவ்வொரு பிரதேசங்களிலும் எங்களுக்கு கிடைக்கின்ற அபிவிருத்தி வாய்ப்புகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், தனது சொந்த மாவட்டமான அம்பாறையிலும், அதற்கு வெளியிலுள்ள மாவட்டங்களிலும் அவருடைய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளார். அதேபோல, எச்.எம்.எம். ஹரீஸும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் என்ற புதிய ராஜாங்க அமைச்சை பாரமெடுத்துள்ளார். அவரது அமைச்சர் வஜிர அபேவர்த்தன, எல்லா இடங்களிலும் பாரிய அபிவிருத்திகளை செய்வதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

கட்சியின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எஸ்.எம். அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், மாகாசபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்