இனப்பிரச்சினையே இனிப்பிரச்சினை

🕔 December 28, 2018

– சுஐப் எம் காசிம் –

டக்கு, கிழக்குப் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை தொடுவானம் போல் தூரமாகிச் சென்றதால், இது வரைக்கும் இழுபட்டுச் செல்கிறது.

இது போன்றதொரு இழுபறி ஏற்படாமலிருக்க இனியாவது இச்சமூகங்கள் ஒற்றுமையில் ஒன்றிப்பதே, இன்று அவசரத் தேவையாகவும் உள்ளது.

இனிவரப்போகும் காலங்களில் பரவலாகப் பேசப்படவுள்ள இனப்பிரச்சினைத் தீர்வின் ஆயுளை, இந்த ஒன்றித்தலே தீர்மானிக்கவுள்ளது. அரசியலமைப்பில் திருத்தம் தேவைப்பட்டதும், அதைத் திருத்துவதற்கான நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் எக்கட்சிக்கும் இல்லாதிருந்தமையும், இனப்பிரச்சினை இழுபறிக்கு காரணமானது.

இனப்பிரச்சினைதான் இனிப்பிரச்சினையாகப் போகிறதோ தெரியாது. அகிம்சை, ஆயுதப்போர்களின் முப்பது வருடப் பரிணாம வளர்ச்சி ஒரு நிலையான, நேர்த்தியான உருவத்தை வடிவமைக்கவில்லை. அவ்வாறு வடிவமைத் திருந்தால் ஈழத்தில் தமிழ் மொழிச் சமூகங்கள் இரண்டினதும் தனித்துவங்கள் தழைத் தோங்கியிருக்கும்.

இந்தத் தளிர்களின் மடியில் தீயைக் கொட்டி, காயப்படுத்திய அந்தத் தீயசக்திகள் எவை? இதுவல்ல இக்கட்டுரையின் ஆதங்கம். இனிப் பிரச்சினையாகவுள்ள இனப்பிரச்சினைக்கு ஆற்றுப்படுத்தல்களூடாக எவ்வாறு தீர்வு காண்பது, இதுவே இனிப்பிரச்சினை.

ஊடக வாழ்க்கையில் என்னால் இப்பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட அத்தனை செய்திகளும், கட்டுரைகளும், தலைப்புகளும் இனப்பிரச்சினை தீருமென்ற எனது நம்பிக்கையின் சான்றுப்பத்திரங்கள். அதில் ஒன்றிரண்டை மனக்கண் முன் சமர்ப்பிக்கின்றேன்.

‘எரிக்சொல்ஹெய்ம் இன்று இலங்கை விஜயம்; இருதரப்புக்களையும் இணங்க வைக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்படலாம்’. இந்த தலைப்பின் நம்பிக்கையில் சில நாட்கள் உருண்டன. காலச்சக்கரம் சுழன்று வருகையில் ‘வடக்கு கிழக்குப் பிரச்சி னைக்கு இடைக்கால சபை’. அஷ்ரஃப், நீலன் திருச்செல்வனின் தீர்வுப் பொதியில் உள்ளடக்கம். இப்பொதி, இனவாதிகளின் பொறிக்குள் சிக்காமல் தீர்வு கிடைக்க வேண்டுமே என்ற வேண்டுதலில் சில நாட்கள் கண் சிமிட்டி மறைந்தன.

இந்த நகர்வுக்குள் இவ்வினப்பிரச்சினை நசுங்கிக் குலைந்தால், இனிப்பிரச்சினை இழுபறிதான் என்றிருந்தேன். எதுவும் நடக்கக்கூடாதென்ற நம்பிக்கை மேலெழ நடப்பவை பற்றித் தெரிந்து கொள்ள அடிக்கடி அஷ்ரஃபைத் தொடர்பு கொள்வேன். தீர்வுப்பொதியைத் தயாரிப்பதிலும், லியாம் பொக்ஸ் உடன்படிக்கை, சர்வகட்சி மாநாடு என்பவைகளில் தீர்வைத் தேடுவதிலும் சக்கரமாகச் சுழன்ற அஷ்ரஃப், எனது அழைப்புக்கு பதிலை மட்டும் தந்து, ”சுஐப், இது பற்றி நீலன் திருச் செல்வனுடன் பேசுங்கள்” என்பார்.

இச்சந்தர்ப்பங்களில் ஆச்சர்யத்துடன் அகல விரியும் எனது கண்கள் ஆனந்தக் கண்ணீரை வலிந்து வரவழைப்பதுமுண்டு ஏன்? பிறப்பில் முஸ்லிமாக இருந்தாலும் பழக்கம், படிப்பு, பண்பாடு எல்லாம் தமிழரின் பெரும்பான்மை நிலத்தில். விரட்டப்பட்ட வாடையும், வலியும் இன்னும் மறையாத சூழலில் தமிழ்த் தலைவரும், முஸ்லிம் தலைவரும் தமிழ் மொழிச் சமூகங்களின் தனித்துவம் நிலைப்பதற்கான தீர்வைத் தேடுவதில் ஒன்றுபட்டுள்ளனரே. இந்த மகிழ்ச்சிதான் எனது மனதுக்குள் ஆனந்தக் கூத்தாடியது.

தெருக்கூத்துக்கள், வாணி விழாக்கள் தேர்த்திருவிழாக்களைப் பார்த்து எத்தனை நாளாகிவிட்டன. தீர்வு வந்தாலோ, அல்லது எவரும் தந்தாலோ தாயகம் சென்று விடலாம் என்பதிலே எனதாத்மா அலை மோதியது.

அஷ்ரஃபின் காலத்தில் தீர்வு கிட்டவில்லை, நீலன்திருச்செல்வனின் முயற்சிகளையும் துப்பாக்கிகள் காவிச் சென்றுவிட்டன. இனி என்ன தீர்வு? எப்படிச் சமாதானம்? என்ற ஏக்கச் சூழலில் இனிப்பிரச்சினை இனப்பிரச்சினையே. இதற்குப்பின்னர் எத்தனை யசூசி அகாசி? எத்தனை எரிக் சொல்ஹெய்ம்? எந்த சட்டா ஹிப்? எங்கோ இருக்கும் ஒஸ்லோ? கண்ணுக்கே தெரியாத கண்கவர் சிட்டிகளில் பேசியும் என்ன பயன்

கணவன் – மனைவி புரிந்துணர்வு, குடும்பத்து உட்பூசல் இவற்றை ஜப்பானில் பேசி என்ன? ஒஸ்லோவில் ஆராய்ந்து என்ன? மனம் திறந்தால் வலி விலகும், தை பிறந்தால் வழி பிறக்கும். எத்தனையோ தை பிறந்தும் மனம் திறக்கவில்லையே.

தீர்வைப் பெறவும் நமது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையே. எனவே இனிப்பிரச்சினை, இனப்பிரச்சினைதான்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற ஆடி, ஓடி உழைத்த எரிக்சொல்ஹெய்ம் ஓய்வுக்காக நுவரெலியாவுக்கு வந்தாலும் “தீர்வோடு வந்துள்ளார் நோர்வே அமைச்சர் சொல்ஹெய்ம்”, இனி இப்பிரச்சினைக்கு சமஷ்டிதான், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம்தான், இல்லாவிட்டால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு விடிவுதான் என்றெல்லாம் எழுதியதில் வாசகர்களை விடவும் அதிகம் ஏமாந்ததும் நானே.

இந்த ஆட்ட, ஓட்டத்தில் சளைக்காத எரிக் சொல்ஹெய்முக்கு அந்நாட்டு அரசாங்கம் அரை அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்ததும், இனி இப் பிரச்சினை நீள்வானம் போல் தொடரப் போவதென்ற வெளிப்பாட்டுக்கே. இவ்விடத்திலே மூன்றாம் தரப்பு, முழுத்தரப்பு, தனித்தரப்பு, சம தானம் (சம தரப்பு) என்ற பேதங்கள் தமிழரையும், முஸ்லிம்களையும் அரசியலில் மேலும் துருவப்படுத்திற்று.

அஷ்ரஃபும் இல்லை, நீலனும் கால்களை நீட்டி நிரந்தரமாகத் தூங்கி விட்டார். இந்த இடைவெளிக்குள் இனிப்பிரச்சினை இனப்பிரச்சினைதான். இக்கால இடைவெளிக்குள் தருணம் பார்த்துப் புகுந்த கடும் போக்கும், புலிகளின் பாசிசப் பாய்ச்சலும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கைளைத் தமிழரிடமிருந்து அந்நியப்படுத்திற்று.

இன்றிலிருந்து இனிப்பிரச்சினை இனப்பிரச்சினையே என்று எண்ணினேன். புலிகளுக்குப் பயந்த மிதவாத தமிழ் தலைவர்களும், வாக்குகளுக்காக தலையை நீட்டிய சில முஸ்லிம் தலைவர்களும் நிரந்தரமாக இவ்வுறவுகளுக்கு வேலியிட்டனரா? இல்லை என்றே நினைத்தேன்.

திம்பு பேச்சுவார்த்தை முதல் ரணில் – பிரபா ஒப்பந்தம் (2002.02.22) வரை நிகழ்ந்த அத்தனை சமாதான பேச்சுக்களிலும் முஸ்லிம் தரப்புக்கு அந்தஸ்த்து அங்கீகரிக்கப்படவில்லை. அரச தரப்பும் இல்லை, பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலும் இல்லை. ஒரே மொழிப் போராட்டம். ஒரே நிலத்துக்கான விடுதலைச் சமரென்றால் தமிழர் தரப்பில் சிறுபான்மையினர் அந்தஸ்துக்கான அங்கீகாரம் கிடைப்பதே நியாயமானது. கிடைக்காது கிடப்பில் விழுந்ததால் இனிப் பிரச்சினை இனப்பிரச்சினைதான் போலிருந்தன அன்றைய நிலைமைகள்.

முஸ்லிம்களுக்கான தீர்வுகள் கிடப்பில் வீழ்த்தப்பட்டதால் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அத்தனை தீர்வு முயற்சிகளையும், தீர்வுகளையும் கிடப்பில் வீழ்த்தும் கோஷங்களைத் தோளில் சுமந்து திரிந்தன முஸ்லிம் தரப்பு. இதனால் இனிப்பிரச்சினை இனப்பிரச்சினைதான் என்றது எனது ஆரூடம். இவர்களின் இந்தக் கோஷங்கள் முஸ்லிம்களுக்கு எனச் சொந்த உரிமைகள் இல்லையோ? தமிழரைத் தோற்கடிக்கும் மனோ பாவமா? இந்தக் கோஷங்களுக்கு ரோஷமூட்டுவது. அவ்வாறானால் இனிப்பிரச்சினை இனப்பிரச்சினைதான்.

ஆனால் இவ்வேலிகளை உடைத்து இன்று ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒன்றுபட்டுள்ள தமிழ் முஸ்லிம் தலைமைகளின் புரிந்துணர்வு வலுக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பு நாட்டைக் கூறுபோடும் எனக்கோஷமிடும் கடும்போக்குக் குரல்கள் வடக்கு, கிழக்கு வானில் புஷ்வாணமாக வேண்டும். இதற்கு 19வது திருத்தத்தில் திரண்ட தமிழ், முஸ்லிம் தலைமைகளின் சக்திகள் மேலும் திரண்டு எழ வேண்டும். அவ்வாறு எழுந்தால் இனப்பிரச்சினை இனிப்பிரச்சினை இல்லை என்றாகிவிடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்