மாகாணசபை உறுப்பினர் குகவரதன் காசோலை மோசடியில் கைது; கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக, மனோ கணேசன் அறிவிப்பு
– அஹமட் –
ஜனநாயக மக்கள் முன்னணியின், மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன், காசோலை மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
7.2 கோடி ரூபா பெறுமதியான காசோலை மோசடி குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவம் மற்றும் அந்தக் கட்சியில் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும், குகவரதனை நீக்குவதாக, அந்த கட்சியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில்;
‘கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்து கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக, மேல் மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும், சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.