வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, சதொச மூலம் அத்தியவசியப் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் றிசாட்
வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அவற்றை விநியோகிக்கும் வகையில், ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக பெய்து வந்த மழையினால் வடக்கில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இம்மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் சென்றடைவதில் தாமதம் காணப்படுகிறது.
எனவே, இதனை கட்டுப்பாடும், தட்டுப்பாடுகளுமின்றி விநியோகிக்க வேண்டியமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் இடம் பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய சதொச மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இம்மக்களுக்கு போதுமான அளவு பொருட்களை அந்தந்த மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தி அவற்றை துரிதமாக வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் பாதிப்புக்குள்ளான மாவட்ட அரச அதிபர்களிடம் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேண்டியுள்ளார்.
05 பார ஊர்திகளில் இந்த அத்தியவசிய பொருட்கள் வெலிசற லங்கா சதொச களஞ்சியசாலையில் இருந்து இன்று புதன்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதில் அரிசி, கிழங்கு, பருப்பு, உப்பு, பால் மா, மற்றும் அத்தியவசிய பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
வடக்கில் பெய்த மழையினால் கிளிநொச்சி,முல்லைத்தீவு ,மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ மற்றும் அரச முகாமைத்துவ அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார தலைமையில் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் முக்கிய கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)