கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் காயம்
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹேனமுல்ல வீட்டுத் திட்டத்துக்கு வெளியில் இன்று காலை 8.00 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
‘புளுமென்டல் சங்கா’ என அழைக்கப்படும் சங்கா சிரந்த எனும் பிரபல்யமான பாதாள உலக நபர், இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதற்காக பிஸ்டல் ரக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலியானவர் 32 வயதுடைய தினேஷ் எரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது காயமடைந்த ஏனைய மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.