அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம்

🕔 December 24, 2018

– மப்றூக் –

பெருந்தலைவர் அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கையை மீண்டும் முன்னெடுத்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு அமையப்பெற வேண்டும் என்று, பெருந் தலைவர் செயற்பட்டார். அக்கோரிக்கை 2000ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த இனப் பிரச்சினை தீர்வு யோசனைவரை முன்னெடுக்கப்பட்டது. ஆயினும் அஷ்ரப்பின் மறைவின் பின் அந்த யோசனை முற்று முழுதாக திட்டமிட்டு நசுக்கப்பட்டது என்றும், அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பீச்வே ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

அதில் பேராளர் மாநாட்டுப் பிரகடனங்கள் தவிசாளராலும், செயலாளராலும் முன்வைக்கப்பட்டன.

முதலாவதாக கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் ‘அஷ்ரஃபின் கொள்கைகளை அடியொற்றிய முதலாவது பேராளர் மாநாட்டு பிரகடனம்’ எனும் தலைப்பில் 11 விடயங்களைக் கொண்ட பிரகடனங்களை மேடையில் முன்மொழிய, பேராளர்கள் தக்பீர் முழகத்துடன் வழிமொழிந்து ஏற்றுக் கொண்டனர்.

அந்த வகையில், தவிசாளர் முன்வைத்த பிரகடனங்கள் வருமாறு;

01. முஸ்லிம்களுக்குஎன்றுஒருகட்சிவேண்டும் என்றுசொன்னார். செய்தும் காட்டினார். அவரின் மரணத்தின் பின் அவரதுகட்சி அவரது கொள்கையில் இன்று இல்லை. அது முஸ்லிம்களுக்கான தனிக் கட்சியாக நிலைபெறவில்லை. மாறாக முஸ்லிம்களின் உரிமையை காவுகொடுத்து பெரிய கட்சிகளின் நலனை மட்டும் காப்பாற்றும் கூடாரமாக மாறிவிட்டது. ஏழைகளின் கரைசேரும் தோணியாக இருந்த கட்சி கோடீஸ்வரர்களின் கம்பனியாக ஆக்கப்பட்டுவிட்டது.

எனவே, பெருந் தலைவரது கட்சியின் கொள்கைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தை இந்த பேராளர் மாநாடு பிரகடனம் செய்கின்றது.

02. இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு அமையப்பெற வேண்டும் என்று, பெருந் தலைவர் செயற்பட்டார். அக்கோரிக்கை 2000ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த இனப்பிரச்சினை தீர்வு யோசனைவரை முன்னெடுக்கப்பட்டது. அவரின் மறைவின் பின் அந்த யோசனை முற்றுமுழுதாக திட்டமிட்டு நசுக்கப்பட்டது. இந்த முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கையை மீண்டும் முன்னெடுத்து செயற்பட வேண்டும் என்று இந்த பேராளர் மாநாடு பிரகடனம் செய்கிறது.

03. 2000ம் ஆண்டைய தேர்தலில் எந்தப் பெரியகட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் வாய்ப்பில்லை. எனவே, நமது கட்சி ஆளுங்கட்சியில் இருப்பது முக்கியமல்ல, எதிர்கட்சியில் அமர்ந்தவாறு பெரும்பான்மைற்ற அரசுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவளிப்பதன் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளை நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளுக்கு ஊடாக வென்றெடுப்பதென தீர்மானித்திருந்தார். இந்த தீர்மானத்தை உயிர் பெறச் செய்ய, மீண்டும் தீவிரமாகச் செயல்படுவது என்று இந்த மாநாடு பிரகடனஞ் செய்கின்றது.

04. இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் என்பது அரசியலில் மாத்திரம் அல்ல, நிருவாகத்திலும் இருக்க வேண்டும் என்று விரும்பியதலைவர், அம்பாறையில் கரையோர மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து செயற்பட்டார். அவரது இந்தக் கோரிக்கை, அம்பாறை முஸ்லிம்களின் வாக்குகளை அபகரிக்கும் தேசியக் கட்சிகளில் கலந்தவர்களின் தேர்தல் கால மேடைப்பேச்சாக மாறி, முஸ்லிம்களை தொடர்ந்து ஏமாற்றுகிறது. இந்த மாநாடு விட்டுக் கொடுப்புகளுக்கு இடமின்றி கரையோர மாவட்டத்தை வென்றெடுப்பது என்று பிரகடனம் செய்கின்றது.

05. பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் ஒலுவில் துறைமுகம் தோல்வியடைந்த ஒரு திட்டமல்ல. மாறாக, அது முஸ்லிம் தேச துறைமுகமாக அடையாளம் காணப்பட்டு இலங்கை முஸ்லிம்கள் பலமடைந்து விடக் கூடாதென்று, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் செயற்பட்டன. இவர்களின் செயற் திட்டத்திற்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம் தலைவர்,மேற்சொன்ன சக்திகளின் கைப்பாவையாக செயற்பட்டு இத்திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு உடந்தையானார். மீண்டும் முஸ்லிம் தேசத்திற்கான துறைமுகமாக ஒலுவில் துறைமுகம் உருவாக்கப்பட வேண்டுமென்றும் அதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்றும், மண்ணரிப்பை தடுப்பதற்கு விஞ்ஞானபூர்வமாக தொழில்நுட்ப அணுகுமுறை பின்பற்ற வேண்டுமென்றும் இந்த மாநாடுபிரகடனம் செய்கின்றது.

06. பெருந்தலைவர் அஷ்ரஃப், சமாந்தரமானதும், சமத்துவமானதுமான உறவு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று செயற்பட்டார். தமிழர் முஸ்லிம் உறவு கடந்தகாலங்களில் வன்முறையும் குரோதமும் கூடிய இருதரப்பு அரசியல் அமைப்புக்களாலும் சிதைக்கப்பட்டது. இவ்வுறவை மீண்டும் புதுப்பிக்க இரு இனங்களில் இருந்தும் புதிதாகஉருவாகின்ற மாற்று அரசியல் சக்திகளால் மாத்திரமே முடியும் என்றும் நம்பினார். எனவே அதனடிப்படையில் தமிழ் இனத்தில் இருந்துஉருவாகும் புதிய மாற்றுஅரசியல் சக்திகளும், முஸ்லிம் தரப்பில் இருக்கும் மாற்றுஅரசியல் சக்திகளும் மொழியால் இணைந்து ஒற்றுமையை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும், மூவினமக்களினதும் புரிந்துணர்வுக்கும் ஒற்றுமைக்கும் மூவினம் சார்ந்த முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்புசெயற்படுவது எனவும் இந்தமாநாடு பிரகடனம் செய்கின்றது.

07.தமிழ், முஸ்லிம் மாற்று அரசியல் சக்திகள் இணைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை ஒரே மேசையில் அமர்ந்து பேசி வடிவமைத்து, சிங்கள அரச தரப்பின் மேசையில் சமர்ப்பிக்க வேண்டுமென்று இந்த மாநாடு பிரகடனம் செய்கின்றது.

08. கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனியலகு என்பது இஸ்லாமிய தீவிரவாதத்தின் தளமாகவோ, உலகின் தீவிரவாத வன்முறைக்கு ஆதரவளிக்கும் நிறுவனமாகவோ இருக்காது என்பதை, இந்த பேராளர் மாநாடு உரத்து பிரகடனம் செய்கின்றது.

09. இலங்கையின் உள்நாட்டுஅரசியல் என்பது எதிரெதிரான இரண்டு சர்வதேச முகாம்களால், எதிரும் புதிருமாக நிருவகிக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் எந்த வெளிநாட்டுச் சக்திகளினதும் கைக்கூலிகளாக செயற்பட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பை பலியிடும் அரசியல் போக்குக்கு எதிரான வேலைத்திட்டங்களுக்காக, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படுவதென, இந்த பேராளர் மாநாடு பிரகடனம் செய்கின்றது.

10. அஷ்ரஃபின் மரணத்தின் பிற்பாடு, என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த தேசியதீரவாதம் முஸ்லிம் இனத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்திலும், அழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முஸ்லிம்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகையில் மூலோபாயமும் தந்திரோபாயமும் வகுத்து செயற்படுவதுடன், இலங்கையின் பாரம்பரிய இடதுசாரி சிந்தனையாளர்களுடனும் இடதுசாரி கட்சிகளுடனும் புரிந்துணர்வுடன் இணைந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு செயற்படுவதென இந்த மாநாடு பிரகடனம் செய்கின்றது.

11. வடகிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தும் செயற்பாடுகளை விரிவாக்குவது என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பிரகடனம் செய்கிறது.

Comments