‘கறுப்பு ஊடகங்கள்’ மீது ரணில் பாய்ச்சல்: ஜனவரியில் பட்டியலை வெளியிடப் போவதாகவும் தெரிவிப்பு
கறுப்பு ஊடகங்கள் அமைச்சரவை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டு சதிகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் குற்றம் சாட்டினார்.
இந்த கறுப்பு ஊடகங்களின் பட்டியலை ஜனவரி மாதம் சபையில் முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கணக்கறிக்கை மீதான விவாதத்தை ஆரம்பித்த பிரதமர் ஒரு கட்டத்தில் ஊடகங்களை கடுமையாக சாட ஆரம்பித்தார்.
“தற்போது அமைச்சரவையில் யார் இருக்கின்றார்கள் யார் இல்லை என்பது தொடர்பாக, இன்றைய தினம் பத்திரிகைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன, எவ்வாறாயினும் பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜங்க அமைச்சர்கள் அனைவரும் நியமிக்கப்பட்ட பின்னர் நான் நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்த எதிர்பார்த்திருந்தேன்.
அமைச்சரவை நாடாளுமன்றத்துக்கே பொறுப்புக் கூற வேண்டும் என்ற நிலைமை உள்ளது. அதேபோல் சில விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம்.
வெவ்வேறான நிலைப்பாடுகள் எம்மத்தியில் இருக்கின்றன. அவை குறித்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவே நாம் முயற்சித்து வருகின்றோம்.
அணைத்து காரணிகளிலும் முட்டி மோதிக்கொண்டு செயற்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றும் பிரதமர் தெரிவித்தார்.