“அம்பாறைக்குத்தான், தலைவரே கெபினட் அமைச்சராக இருக்கிறாரே“: 18 வருடங்களாக ஏமாற்றும் ஹக்கீம்
– மரைக்கார் –
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்புக்கு பிறகு, கடந்த 18 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீண்டும் தவறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராகவிருந்த பசீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த போதும், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சூழ்ச்சிகளைத் தாண்டியே அந்தப் பதவியை – தனது அரசியல் சாதுரியத்தினால் பெற்றெடுத்தார்.
ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்கக் கூடாது என்பதிலும், தான் வகிக்கும் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியை தனது கட்சிக்குள் இன்னொருவர் வகிக்கக் கூடாது என்பதிலும் மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
ஆனால், முஸ்லிம் காங்கிரசின் இருதயமாகவும் அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருடைய மாவட்டமாகவும் இருக்கின்ற அம்பாறைக்கு, முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றினை பெற்றுக் கொடுக்காமல் ‘காய் வெட்டி’ வருவது, அந்த மாவட்ட மக்களுக்கு ஹக்கீம் செய்யும் பாரிய துரோகமாகும்.
அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளால் அரசியல் வயிறு வளர்க்கும் ரஊப் ஹக்கீம்; அந்த மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்வது பாரிய முரணாகும்.
ஆனால், ஹக்கீமை அண்டிப் பிழைக்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சில அரசியல் தரகர்கள், இந்த விடயத்தில் ஹக்கீமுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பேசுவதும், ஹக்கீமை நியாயப்படுத்துவதுமே, இற்றைவரை ஹக்கீமை காப்பாற்றி வருகிறது.
அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளாலும், பலத்தினாலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவனாக பவனி வந்து கொண்டிருக்கும் ஹக்கீம்; அம்பாறை மாவட்ட மக்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதை, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இதை ஹக்கீமிடம் கேட்டால்; “அம்பாறை மாவட்டத்துக்குத்தான் தலைவரே கெபினட் அமைச்சராக இருக்கிறாரே” என்று, பொது மேடையில் பம்மாத்துக் கதை கூறுவார். இதைக் கேட்டுப் புல்லரித்துப் போகும் பாமரத்தனமான போராளிகளும்; “நாரே தக்பீர்” சொல்லி கோஷமிடுவார்கள்.
பிறகென்ன? அடுத்த பொதுத் தேர்தல் வரை – தனது வண்டியை ஹக்கீம் பிரச்சினையின்றி ஓட்டிச் செல்வார்.