ரணிலின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படாதென, அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வைத்தே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
மேலும், அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்த்துக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்வரும் நாள்களில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஸ்ரீ. லங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட விஜித் விஜேமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஸ்மன் செனவிரத்ன ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.