பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்
🕔 December 18, 2018
– றிசாத் ஏ காதர் –
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் ‘புகைத்தலற்ற இலங்கை’ என்கிற தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ. றஜாப் றஹீம் தலைம தாங்கினார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமான மேற்படி புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம், வைத்தியசாலை வீதியினூடாக சென்று மத்தியவீதி வழியாக பிரதான வீதியை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட்ட பிரதேச சபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்களுடன் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது துவிச்சக்கர முச்சக்கர வண்டிப்பவனிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதி அம்சமாக புகைத்தல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, வீதி நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிஇ பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. நசீல், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியயோகத்தர்கள் உட்பட அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, தொற்றா நோய் பிரிவு என்பனவற்றின் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.