தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில், கூட்டணி உருவாக்கவுள்ளதாக, ரணில் தெரிவிப்பு
தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இன்னும் சில கட்சிகளையும் ஒன்று சேர்த்து இந்தக் கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.
கொழும்பு – காலிமுகத் திடலில் இடம்பெற்ற நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
“எங்களுக்கு பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் தான் எங்கள் பலம். ஜனநாயகம் இங்கு மிளகாய்த் தூள் ஆனது. நாங்கள் சிக்ஸர் அடித்தோம். உயர்நீதிமன்றமும் சிக்ஸர் அடித்தது.
இப்போது தேர்தலை கேட்கின்றனர். நாடாளுமன்றை கலைக்க வேண்டுமானால் ஒரு யோசனையை கொண்டு வந்திருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை. அரசியலமைப்பை மீறி அரசியலமைப்பை பாதுகாக்க முடியாது.
இப்போது இனவாதம் பேசுகின்றனர். நாட்டை பிரிப்பதாக இருபது வருடமாக கூறுகின்றனர். நாங்கள் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் ஒற்றையாட்சியின் கீழ்தான் ஏற்படுத்துவோம்.
நாடாளுமன்ற தேர்தல் வந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தாருங்கள். அப்போதே எங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும்.
தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம். எங்களது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்” என்றார்.