பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை

🕔 December 16, 2018

ணில் விக்ரமசிங்க இன்று, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்
பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார். இதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் மகிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செலயகத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

புதிய அமைச்சரவை நாளை திங்கட்கிழமை பதவியேற்கும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பது இது 5ஆவது முறை என்பது சிறப்பம்சமாகும்.

ரணில் விக்மசிங்க முதன்முறையாக 1993ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் 1994ஆம் ஆண்டு வரை மட்டுமே அவர் அந்தப் பதவியில் நீடித்தார்.

2001ஆம் ஆண்டு இலங்கையின் 17ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தார். எனினும், 2004ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடிந்தது.

இதன்பின்னர், 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் தேதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். பிறகு 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

இந்தப் பின்னணயில் இன்று ஐந்தாவது முறையாக ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தாலும், இதுவரை முழுமையாக ஐந்து வருடங்கள் பிரதமர் பதவியை வகித்ததில்லை.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க, 1977ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்ற அவர், இன்றுவரை அந்தக் கட்சியின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்