மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த

🕔 December 15, 2018

கிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார்.

தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார் 

இதன்மூலம் இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வரும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரதமர் யார்?

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக மீண்டும் டிசம்பர் 16ஆம் திகதி காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன பிபிசிக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையேயான டிசம்பர் 14ஆம் திகதி நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை புதிய அரசாங்கம் பதவியேற்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ளும் எந்த எதிர்பார்ப்பும் தனக்கு இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்பின்போது தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்தாரா எனக் கேட்டபோது, ”அப்படி கூறவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் இதற்கு ஒத்துழைக்கக்கூடாது” என்றே கூறியதாக லக்ஸ்மன் யாப்பா தெரிவித்தார்.


Comments

புதிது பேஸ்புக் பக்கம்