அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

🕔 December 12, 2018

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து, குறித்த பிரதேசங்களுக்கு இன்று புதன்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தனது குழுவினருடன் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி வேலியிடப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, குறித்த வேலிகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதேவேளை, இப்பகுதியில் தோணி மற்றும் படகுகளை சொந்தமாக வைத்துக் கொண்டு கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள், உரிய அனுமதியினைப் பெற்றுக் கொண்டு வாடிகளை அமைத்திருப்பார்களாயின் அது குறித்த ஆவணங்களை ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இதன்போது பிரதேச செயலாளர் கூறினார்.

எவ்வாறாயினும், கடற்கரையிலிருந்து குறித்தொதுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள் வேலிகளை அமைப்பது சட்டவிரோதமான செயற்பாடு என்பதை, பிரதேச செயலாளருடன் வருகை தந்த குழுவினர், பொதுமக்களுக்கு விளக்கினர்.

இந்த நிலையில், உரிய ஆவணங்கள் ஆராயப்பட்டு, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வேலிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் இதன்போது பிரதேச செயலாளர் லியாகத் அலி உறுதியளித்தார்.

இதன்போது, அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரங்களையும் சிலர் அடாத்தாக கைப்பற்றி வருகின்றமையினை இதன்போது பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டிய பொதுமக்கள், அவ்விவகாரம் தொடர்பிலும் உடனடி நடவவடிக்கை எடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர்.

அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமாக வேலிகளிடப்பட்டு காணிகள் அபகரிக்கப்டுகின்றமையினை ‘புதிது’ செய்தித்தளம் படங்களுடன் அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்