அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா?

🕔 December 11, 2018

– புதிது செய்தித் தளத்துக்காக மரைக்கார் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையானது, முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் 08 உறுப்பினர்களைக் கொண்ட மு.காங்கிரஸானது, தவிசாளர் பதவியினை துண்டு குலுக்கல் மூலம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் ஒருவரின் ஆதரவைப் பெற்றே, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தவிசாளர் பதவியினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள குழுப்ப நிலையினை அடுத்து, நேற்றைய தினம் அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.காங்கிரசின் தவிசாளர் முன்வைத்த வரவு செலவுத் திட்டப் பிரேரணைக்கு எதிராக, பொதுஜன பெரமுன உறுப்பினர் வாக்களித்திருந்தமை குறிப்பிடக்கது.

நேற்றைய வாக்கெடுப்பில், மேற்படி வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 08 வாக்குகளும், எதிராக 09 வாக்குகளும் கிடைக்கப் பெற்றிருந்தன.

இந்த நிலையில், அட்டாளேச்சேனை பிரதேச சபையில் பெரும்பான்மையினை இழந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், தவிசாளர் பதவியினை வைத்திருத்தல் எவ்வாறு ஜனநாயகமாகும் என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை ஜனநாயகத்துக்கு முரணானது என, மு.காங்கிரஸின் தலைவர் கோஷமிட்டு வரும் நிலையில்; அவரின் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத அட்டாளைச்சேனை பிரதேச சபையில், எவ்வாறு தவிசாளர் பதவியை வகிக்க முடியும் எனவும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

எனவே, ஜனநாயகத்தின் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெரும்பான்மையற்ற மு.காங்கிரஸின் தவிசாளர், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், பெரும்பான்மையை காட்டும் அணியினருக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுகின்றன.

உண்மையாகவே, மு.காங்கிரசின் தலைவர் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராயின் இந்த கோரிக்கை குறித்து அதீத கவனம் செலுத்துதல் வேண்டும்.

தேசிய அரசியலில் ஒரு முகமும், உள்ளுர் அரசியலில் ஒரு முகமும் காட்டுவதென்பது போக்கிரித்தனமாகவே அமையும்.

எனவே, சட்டங்கள் எவ்வாறு இருந்தாலும், ஜனநாயகத்தின் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெற்றுள்ள தவிசாளர் பதவியை மு.காங்கிரஸ் துறக்க வேண்டும் என்பதுதான், பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.

இல்லை, “எங்களுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் எங்களுக்குள்ள தவிசாளர் பதவியைத் துறக்க மாட்டோம்” என்று, மு.காங்கிரஸ் கூறுமாயின்; நாடாளுமன்றில் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுத்தமைக்கு எதிராக கூச்சலிடுவதற்குரிய எந்தவித லாயக்கும் ஹக்கீமுக்கு இல்லாமல் போய் விடும் என்பதையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்