பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம்
– பாறுக் ஷிஹான் –
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபரொருவர், மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திலேயே இந்த ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளது.
பாரதிபுரத்துக்கு அண்மையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவருக்காக இந்த ஆள்மாறாட்டம் நடந்துள்ளது.
இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்தவர், 30 வயது மதிக்கத்தக்க ஒருவராக இருந்தமையினால், சந்தேகம் கொண்ட மேற்பார்வையாளர், தனது அதிகரிக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பரீட்சைத் தாளின் முதலாம் பகுதிக்கு விடைகள் எழுதிய நிலையில் மேற்படி நபர், இரண்டாம் பகுதிக்கு விடைகள் எழுதாமலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இருப்பினும் முதலாம் பகுதி வினாத்தாள் எழுதியதன் அடிப்படையில், குறித்த விண்ணப்பதாரி மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஆகியோரை இனங்கண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.