பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்
நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் மற்றும் மலைத்தீவிலிருந்து இவ்வாறான கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
பேருவளையில் 231 கிலோகிராம் 54 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல், அண்மையில் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கடத்தல்காரரினால் இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பேருவளையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடத்தல்காரர்களின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.