அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

🕔 December 8, 2018

– புதிது செய்தியாளர் –

ம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கரையோரை பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை அலுவலக அதிகாரிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோரிடம், தாம் வேண்டுகோள் விடுத்தும், இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக இவ்வாறு வேலியிட்டு சில தனிநபர்கள் அடைத்து வருகின்றமையினால், அங்குள்ள மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை, ஓய்வெடுத்துக் கொள்ளும் வகையில் கடற்கரைக்கு வருகின்ற பொதுமக்களுக்கும், இந்த சட்ட விரோத நடவடிக்கையினால் பாரிய இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, கடற்கரைக்கு மிக சமீபமாகவுள்ள நிலங்களில், சிலர் தென்னை மரங்களை நட்டுள்ளமையினாலும், அவ்வாறு தென்னை மரங்கள் நடப்பட்டுள்ள கடற்கரை நிலங்களை குறித்த தனி நபர்கள் சொந்தம் கொண்டாடுகின்றமையினாலும், கடற்கரையில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஓரிருவர் இந்தப் பகுதியில் இவ்வாறு அரசுக்குச் சொந்தமான கடற்கரை நிலங்களை அபகரித்து வேலியிட்டமையினைத் தொடர்ந்து, தற்போது கணிசமானோர் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இவ்வாறு சட்ட விரோதமாக கடற்கரைக் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டினால், அந்தப் பகுதியில் வாடிகளை அமைத்து தொழில் செய்து வரும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசுக்குச் சொந்தமான கடற்கரை நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் வேலியிடும் நபர்களுக்கு எதிராக, உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்