அட்டாளைச்சேனையில் மாணவ சீர்திருத்தம்: மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசுகிறோமா?

🕔 December 8, 2018

– மரைக்கார் –

ட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட சலூன் கடைகளில், பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைலாக’ அல்லது பாடசாலையில் கூறப்பட்ட வரைமுறைகளுக்கு அப்பால் சென்று முடி வெட்டக் கூடாது என அறிவுறுத்தும் கடிதங்கள் ஒட்டப்பட்டுமையைக் காணக் கிடைக்கின்றன.

ஊரின் முக்கியஸ்தர்கள், பாடசாலை நிருவாகத்தினர், சலூன் கடை உரிமையாளர்கள்  மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்கவே, மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், சலூன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை மீறும் சலூன் கடைகளின் அனுமதிகள் ரத்துச் செய்யப்படும் என்றும் அந்தக் கடிதங்கள் எச்சரிக்கின்றன.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் கையொப்பம், அந்தக் கடிதத்தில் உள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.

என்றாலும் சலூன் கடைகளுக்கு வருகின்ற மாணவர்களில் கணிசமானோர், அவர்கள் சொல்லுகின்றமை போன்று முடி வெட்ட முடியாது என்று கூறினால், எழுந்து சென்று விடுகின்றனர் எனவும், அருகிலுள்ள அக்கரைப்பற்றுக்குச் சென்று, அங்குள்ள சலூன்களில் தமது விருப்பப்படி முடிவெட்டிக் கொள்கின்றனர் எனவும்,  அட்டாளைச்சேனையிலுள்ள சலூன் கடை உரிமையாளர்கள் கூறி, தமது தொழில் குறித்தும் கவலைப்படுகின்றனர்.

இன்னொருபுறம் மேற்படி முயற்சியில் ஈடுபட்டோர் – மாணவர்களின் ‘மயிரி’ல் காட்டும் அக்கறையை, போதைப் பழக்கத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் காட்டவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

அட்டாளைச்சேனையில் ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பாவனைகள் மிகவும் சர்வசாதாரணமாக உள்ளது. மாணவர்களின் கைகளுக்கும் இவை நினைத்த நேரத்தில் செல்லும் நிலையும் ஏற்பட்டு விட்டது.

மாணவர்கள் மிகச் சாதாரணமாக கஞ்சாவை புகைப்பதைக் காண முடிவதாக, பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலால் திணைக்களத்தினர் நடத்திய தேடுதலில், ஹெரோயின் வைத்திருந்த பலர் சிக்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனையின் கடற்கரையில் பியர் ‘டின்’களும், சாராய போத்தல்களும் பார்க்கும் இடங்களிலெல்லாம் கிடக்கின்றன. அவை வானத்திலிருந்து விழுந்தவையல்ல என்பதை, இங்குள்ள சீர் திருத்தவாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தம்மை நோக்கி மக்களின் பார்வையை உடனடியாகத் திருப்புவதற்காகவும், அதனூடாக  கிளுகிளுப்பான அடையாளங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடுகின்றவர்களாக காட்டிக் கொள்கின்றவர்கள் முன்னிற்கும், ‘சமூக தீர்திருத்த முயற்சிகள்’ ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை முதலில், நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்களிடையே பரவியிருக்கும் போதைப் பழக்கத்தை அப்படியே வைத்துக் கொண்டு, அவர்களின் ‘முடி’யை வெட்டும் விவகாரத்தில் இத்தனை ஆழமாக, மேற்படி சீர்திருத்தவாதிகள் மூக்கு நுழைத்திருப்பதைக் காண்கையில்; ‘மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமோ’ என்கிற கவலைதான் எழுகிறது.

எனவே, எமது சமூகத்தை – நாளை தமது தோள்களில் சுமக்கப் போகின்ற மாணவச் செல்வங்களை எவ்வாறு சீர் திருத்த வேண்டும், அவற்றினை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், எந்தச் சீர்திருத்தத்தை முதலில் கையில் எடுக்க வேண்டும் என்பதை, களத்தில் நிற்போர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அவற்றினைச் செய்யாமல், ‘மலையை விட்டு, மயிரைப் புடிக்கும்’ இவ்வாறான முயற்சிகளால், எந்த அடைவுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்