வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல்
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களில், இந்த வருடத்தின் இதுவரை காலப் பகுதியில் மட்டும் 247 பேர், பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 50 பெண்கள் மற்றும் 145 ஆண்கள் இயற்கை மரணம் அடைந்ததாகவும், 06 பெண்களும் 25 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 21 பேர் வீதி விபத்துக்களில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் 70 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மரணமானவர்களில் சஊதி அரேபியா, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்களே அதிகமானோர் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.