பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது
(பாபர் மசூதி உடைக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன)
இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம் இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது.
மசூதியை உடைக்க லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் முகாமிட்டிருந்தனர். அதில், பல்பீர் சிங் என்பவரும் ஒருவர். பானிபட் நகரைச் சேர்ந்த பல்பீர் சிங்கின் தந்தை தவுலத் ராம், ஒரு ஆசிரியர்.
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு, பல்பீர் சிங் அந்தக் கட்சியில் சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சித்தாந்தங்கள் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்து அந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.
ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்றிருந்த பல்பீர் சிங்கின் மனத்தில், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் ஊறியிருந்தது. 1992- ம் ஆண்டு டிசம்பர் 01ஆம் திகதி தொடக்கம் அயோத்தியில் கரசேவகர்கள் குவிந்தனர்.
பானிபட்டில் இருந்து பல்பீர் சிங் தன் நண்பர் யோகேந்திர பாலுடன் சேர்ந்து அயோத்திக்குச் சென்றார். டிசம்பர் 06ஆம் திகதி, ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியாமல்போக மசூதிமீது கரசேவகர்கள் ஏறத் தொடங்கினர். மசூதியின் ‘டூமை’ (கோபுரம்) குறிவைத்து பல்பீர் சிங், தன் நண்பருடன் ஏறினார். பாபர் மசூதி ‘டூம்’ (கோபுரம்) மீது ஏறிய முதல் கரசேவகர் இவர்தான்.
மசூதியின் கோபுரத்தை உடைத்த பிறகு, பானிபட் திரும்பிய பல்பீர் சிங்குக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடும் உற்சாகத்துடன் வீட்டுக்குச் சென்றார். வீட்டிலோ வரவேற்பு வேறு விதமாக இருந்தது.
மதச்சார்பின்மையில் நம்பிக்கைகொண்டிருந்த பல்பீர் சிங்கின் தந்தை, அவரை கடுமையாகக் கண்டித்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, தவறு செய்துவிட்டதாகத் தந்தையிடம் பல்பீர் சிங் மன்றாடினார். 20 வயது பல்பீர் சிங்குக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை.
பிற்காலத்தில் தன் தவற்றை உணர்ந்த பல்பீர் சிங், இஸ்லாத்துக்கு மாறி, தன் பெயரை முகமது அமீர் என்று மாற்றிக்கொண்டார். இவரின் நண்பர் யோகேந்திர பாலுவும் இஸ்லாத்தைத் தழுவினார்.
தற்போது இவரின் பெயர், முகமது உமர். இஸ்லாமியப் பெண்ணை மணந்துகொண்ட அமீருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.