ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது
நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேற்படி வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை 07 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மா அதிபர், இந்த விடயத்தை நீதிமன்றில் கூறினார்.
ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்படும் சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அரசியலமைப்பின் 38 (2) உறுப்புரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அந்த உறுப்புரைக்கமைய, ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்படும் சந்தர்ப்பத்தில், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப்பிரேரணையை சமர்ப்பித்து, அதன் மூலம் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய, உச்ச நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான், உச்ச நீதிமன்றம் ஊடாக ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யபட்டு, அதன் இறுதி அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சட்டமா அதிபர் வலியுறுத்தினாரல்.
எனினும் அந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்ய முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.