பொட்டு அம்மான் உயிருடன் இல்லை; கருணாவின் தகவலுக்கு மறுப்பு

🕔 December 3, 2018

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது நலன்களுக்காக பொட்டு, அம்மான் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயினும், புலிகள் அமைப்பின் தலைவர் எவரும் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக தற்போது கூறுகின்றவர்கள், எதிர் காலத்தில் தமது நலன்களுக்காக புலிகளின் ஏனைய தலைவர்களான பால்ராஜ் அல்லது கிட்டு போன்றோரைக் கூட உயிருடன் உள்ளார்கள் என்று கூறுவார்கள்” எனவும், ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப் பேச்சாளர் துளசி கூறினார்.

மேலும், புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பது, அவர்களுடன் முள்ளிவாய்க்காலில் இணைந்து நின்று போராடிய, இப்போதைய புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போரளிகளுக்கே தெரியும் எனவும், புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் கட்சியினுடைய ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளானர் என்றும், அவர் நோர்வேயில் வசித்து வருவதாகவும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த, அந்த அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்த நிலையிலேயே, ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப் பேச்சாளர் துளசி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்