போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா
– மப்றூக் –
“என்றுடைய பெயர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகிறது. சொந்த இடம் கொழும்பு. 16 வயதில் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கினேன். அதுவும் முதலில் பாவித்தது ஹெரோயின்.
சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போனபோது, அங்கு தம்பி முறையான ஒருவரும், அவரின் நண்பனும் ஹெரோயின் பாவித்தார்கள். அங்குதான் நான் போதையைப் பழகிக் கொண்டேன்.
பிறகு ஒரு கட்டத்தில், ஒவ்வொரு நாளும் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கினேன். ஹெரோயின், கஞ்சா, சாராயம், சிகரட் என்று எல்லாவற்றையும் பாவித்தேன்.
போதைப் பழக்கம் என் வாழ்க்கையை, மோசமான பக்கமெல்லாம் திருப்பி விட்டது. ஒருநாள், எனது நண்பனொருவன் தனது காதலியை கூட்டிக்கொண்டு வந்து, என் முன்னால் நின்றான். அவன் கையில் காசு இருக்கவில்லை. என்னிடம் உதவி கேட்டான். நண்பனுக்காக, ஒரு கொள்ளையில் இறங்கினேன்.
கடைக்காரர் ஒருவரின் கழுத்தில் கத்தி வைத்து, 67 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டேன். அதுதான் முதல் கொள்ளைச் சம்பவம். பிறகு, போதைப் பாவனைக்காக பணம் தேவைப்பட்டதால், கொள்ளை தொடர்ந்தது. வீதியில் செல்லும் பெண்களின் மாலைகளைக் கூட அறுத்துக் கொண்டோடினேன்.
சில காலம் சிறைவாசம் அனுபவித்தேன். சிறையிருந்த நாட்களிலும், தொடர்ச்சியாக ஹெரோயின் கிடைத்தது.
ஹெரோயின் பாவனைக்காக நாளொன்றுக்கு 08 ஆயிரம் ரூபா வரையில் எனக்குத் தேவைப்பட்டது. எனவே, நானே ஹெரோயின் விற்கத் தொடங்கினேன். அதன் மூலம் எனக்குத் தேவையான ஹெரோயினைப் பெற்றுக் கொண்டேன்.
ஆனாலும், எனது வாழ்வில் நிம்மதியிருக்கவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் பொலிஸ் நெருக்குவாரம் இருந்தது. போதையால் உடலும், மனமும் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கை சோர்வையும் அச்சத்தைத் தந்தது. அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று தீர்மானித்தேன்.
அப்போதுதான் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான பயிற்சிகளை வழங்கும் ‘விமோச்சனா இல்லம்’ பற்றி அறியக் கிடைத்தது. போதைப் பழக்கத்தைக் கை விடுவதற்குரிய எனது விருப்பத்தை குடும்பத்தாரிடம் சொன்னேன். உடனடியாக விமோச்சனா இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார்கள்”.
இலங்கையின் மட்டக்களப்பில் விமோச்சனா இல்லத்தில் விமலை சந்தித்தோம். அங்கு அவர் வந்து 12 நாட்களே ஆகியிருந்தன. விமலின் உடல் நலிந்து போயிருந்தது. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். பேசுவதற்குக் கூட சக்தியற்றிருந்தார். மிக மெல்லிய குரலில்தான் அவர் பேசினார்.
‘விமோச்சனா இல்லம்’ ஒரு தொண்டு நிறுவனமாக செயற்பட்டு வருகிறது. ‘நாங்கள் இதை ஆரம்பித்து 07 வருடங்கள் ஆகின்றன’ என்றார் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், இணை ஸ்தாபகருமான திருமதி செல்விகா.
கனடாவைச் சேர்ந்த ஜோர்டன் கோர்த் என்பவரின் நிதியுதவியுடன் ‘விமோச்சனா இல்லம்’ ஆரம்பிக்கப்பட்டதாக செல்விகா கூறினார். “ஜோர்டன் கோர்த் போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டவர். அவருடைய 12 வயதிலேயே போதைப் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். இப்போது அவருக்கு 32 வயதாகிறது”.
“போதையினால் ஏற்படும் பாதிப்புகளை சொந்த வாழ்வில் அனுபவித்தவர் என்பதால், போதைக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான நிருவனம் ஒன்றினை உருவாக்க வேண்டுமென்று ஜோர்டன் விரும்பினார். அதற்காக அவர் நிதியுதவியளிக்கத் தயாராக இருந்தார். எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் ஜோர்டனின் தொடர்பு கிடைத்தது. அதன் பிரதிபலன்தான் விமோச்சனா இல்லம். வேறு சில நாடுகளிலும், ஜோர்டனின் நிதியுதவியுடன், போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன” என்றார் செல்விகா.
விமோச்சனாவில் அனுமதிக்கப்படுகின்றவர்கள், 42 நாட்கள் அங்கு தங்க வேண்டும். போதைப் பழக்கத்தைக் கைவிடுவதற்காக அங்கு எந்தவிதமான மாற்று மருந்துகளும் வழங்கப்படுவதில்லை. தியானம், உளவள ஆலோசனைகள், போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகளை வி ஞ்ஞான ரீதியாக எடுத்துக்கூறும் வகுப்புகள் உள்ளிட்டவை, அங்கு நடக்கின்றன.
அந்த 42 நாட்களில், முதல் ஏழு நாட்களையும் ‘போதை நீங்கும் காலம்’ (detox period) என்று அழைக்கின்றார்கள். அந்த நாட்கள் கொஞ்சம் கடுமையாக இருக்கும். மதுவுக்கு அடிமையானவர்கள், இந்த நாட்களில் வித்தியாசமான மனநிலைக்கு உள்ளாவார்கள். சிலருக்கு பார்வை படும் இடமெல்லாம் பூச்சிகள் ஊர்வது போல் தெரிந்ததாகக் கூறி மிரண்டுள்ளனர். சுற்றியுள்ள தென்னை மரங்களையெல்லாம் உயர்ந்த மனிதர்கள் என்று கூறி, அவற்றுடன் சண்டையிடத் தொடங்கியிருக்கின்றனர்.
ஆனால், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு detox period இவ்வாறான பிரச்சினைகளைத் தருவதில்லை. விமோச்சனாவில் நாம் விமலை சந்தித்தபோது, அவர் போதை நீங்கும் காலத்தை கடந்திருந்தார். அந்த நாட்கள் எவ்வாறு இருந்தன என்று அவரிடம் கேட்டோம். “உடல் மிகவும் வலித்தது. கடுமையான சோர்வை உணர்ந்தேன்” என்றார்.
வீட்டிலும், சூழலிலும் போதைப் புழக்கம் இருக்கும்போது, அங்குள்ள பிள்ளைகள் அதனை எத்தனை இலகுவில் பழக்கிக் கொள்கின்றனர். என்பதற்கு விமோச்சனா இல்லத்தில் சந்தித்த பார்த்திபனின் கதை குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.
“எனது அப்பா குடிப்பார். சிலவேளைகளில் அவருக்கு சாராயம் வாங்கி வர என்னை அனுப்புவார். எங்கள் பகுதியில், வீட்டில் வைத்தும் சாராயம் விற்பார்கள்.
அப்போது எனக்கு 13 வயது. ஒருநாள் அப்பாவுக்கு வாங்கி வந்த சாராயத்தை, இடைவழியில் வைத்து போத்தல் மூடியில் ஊற்றி குடித்துப் பார்த்தேன். அப்பா கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக, போத்தல் மூடியில் எடுத்த சாராயத்துக்குப் பதிலாக, தண்ணீரை சாராய போத்தலில் கலந்து விட்டேன். இந்தப் பழக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பெருங் குடிகாரனாக மாறிவிட்டேன்” என்று கூறும் பார்த்திபனுக்கு இப்போது 48 வயதாகிறது.
நல்ல சம்பளத்துடன் பெரிய தொழிலில் இருந்த பார்த்திபன், ஒரு கட்டத்தில் குடிப்பழக்கம் காரணமாக, தொழிலை இழந்தார். சொத்துக்களை விற்றார். குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டிலும், சொந்தங்களிடமும் கைநீட்டத் தொடங்கினார்.
குடிப்பழக்கத்தில் இருந்தபோதே, அதிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகளை வழங்கும் சில கருத்தரங்குகளில் கலந்து கொண்ட பார்த்திபனுக்கு, ஒரு நாள், குடியை விடவேண்டும் எனத்தோன்றியது. விமோச்சனா இல்லம் வந்தார்; குடியை மறந்தார்.
பார்த்திபன் படித்தவர், பல மொழிகள் தெரிந்தவர். அதனால் விமோச்சனா இல்லத்திலேயே அவருக்கு இணைப்பாளர் பதவி கிடைத்தது. கடந்த 03 வருடங்களாக பார்த்திபன் அங்கேயே இருந்து, பணியாற்றி வருகிறார்.
விமோச்சனா இல்லத்துக்கு வந்தவர்களில் இதுவரையில் 391 பேர், குடி மற்றும் போதைப் பழக்கத்திலிருந்திருந்து மீண்டு சென்றுள்ளனர்.
“இங்கிருந்து 42 நாட்களையும் முடித்துக் கொண்டு செல்கின்றவர்களை நாம் அப்படியே விட்டு விடுவதில்லை. அவர்களுடன் ஒரு வருடத்துக்கு தொடர்புகளை வைத்திருப்போம். ஆரம்ப மாதங்களில் ஒவ்வொரு நாளும், பின்னர் இடைக்கிடையேயும் அவர்களுடன் தொலைபேசியில் பேசுவோம். மீண்டும் போதைப் பழக்கத்துக்குள் அவர்கள் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, இவ்வாறு கரிசனையுடன் செயற்படுகின்றோம்” என்கிறார் செல்விகா.
இலங்கையில் போதைப் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஒருகாலத்தில் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் பற்றி தெரிந்திராத பல ஊர்களுக்கு, இப்போது ஹெரோயின் பாவனைக்கு வந்து விட்டது.
இவ்வாறான காலகட்டத்தில், விமோச்சனா இல்லம் ஆற்றி வரும் பணி பெறுமதியானதாகும்.
விமோச்சனா இல்லத்தில் தோட்டச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக அங்கு தங்கியிருப்பவர்கள்தான் தோட்டத்தைப் பராமரிக்கின்றார்கள். அங்கு விளையும் மரக்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவற்றை விமோச்சனா இல்லத்தின் முன்னால் வைத்து விற்பனை செய்கிறார்கள். அதில் வருகின்ற பணத்தை, அங்குள்ளவர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இன்னொருபுறம் பயிர் வளர்ப்பும் அங்கு உள்ளன. அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியும், விமோச்சனா இல்லத்தின் தொண்டுப் பணிகளுக்குப் பயன்படுகிறது.
“ஒரு கால கட்டத்தில், போதையிலிருந்து மீளும் பொருட்டு, இங்கு வந்து தங்குவதற்கு பலர் வெட்கப்பட்டனர். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. எல்லா சமூகத்தவர்களும் இங்கு வந்து தங்கி, போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு சென்றுள்ளனர்” என்கிறார் செல்விகா.
“இவ்வாறான ஒரு நிலையத்தை நடத்துவது மிகவும் கடினமான காரியம். போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களை கையாள்வதும் பராமிப்பதும் சவாலானதாகும். இன்னொருபுறம், விமோச்சனா இல்லத்துக்குத் தேவையான நிதியும் இப்போது முழுமையாகக் கிடைப்பதில்லை. எமக்கான நிதியினை சுயமாகத் தேடிக் கொள்வதற்கான முயற்சியைத் தொடங்குமாறு, இதன் ஸ்தாபகர் ஜோர்டன் கோர்த் எம்மிடம் கூறிவிட்டார். எனவே, நிதியைத் தேடிக் கொள்வதும் இப்போது, எமக்கு சவாலானதொரு விடயமாக மாறி விட்டது” என, செல்விகா தமது நிலையினை விவரித்தார்.
இலங்கையில் மது பாவனை அதிமாக உள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்றாகும். கடந்த வருடம் மண்முனை வடக்கு மகளிர் அமைப்புகளின் சம்மேளனம் தயாரித்த அறிக்கை ஒன்றிலே, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதமொன்றுக்கு 41 கோடி 36 லட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபாய், மதுவுக்கு செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு மாவட்டத்தில், விமோச்சனா இல்லம் போன்ற தொண்டு நிறுவனங்களின் தேவை, மிகவும் அவசியமாகும்.
ஊடகம் என்கிற வகையில், விமோச்சனா இல்லம் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேருங்கள் எனும் வேண்டுகோளை முன்வைக்கும் செல்விகா, ‘போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான விருப்பம் உள்ளவர்களுக்கு உதவ, நாங்கள் காத்திருக்கிறோம்’ என்கிறார்.
நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (27 நொவம்பர் 2018)