சிறப்பாக நடந்தேறிய ‘அறபாவின் ஆளுமைகள்’ விருது வழங்கும் விழா; அதிபர் அன்சார் தலைமை
🕔 November 27, 2018
– முன்ஸிப் அஹமட், படங்கள் கே.ஏ. ஹமீட் –
ஆற்றல், திறமை மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் ‘அறபாவின் ஆளுமை’ எனும் விருது வழங்கும் விழா, இன்று செவ்வாய்கிழமை, வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. றஹ்மதுல்லா விசேட அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ். அம்ஜத்கான், எம்.ஏ. அபுதாஹிர், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் அதிகளவு புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் இவ்விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டதோடு, கற்றுக் கொடுத்த ஆசிரியர் எம்.ஏ. சலாஹுதீன் பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பாடசாலையின் பிரதியதிபர், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும், பாடசாலையின் கல்விசாரா ஊழியர்களுக்கும் இதன்போது கௌரவம் வழங்கப்பட்டது.
அறபா வித்தியாலயத்தின் இந்த ஆண்டுக்குரிய சிறந்த மாணவர்கள், சிறந்த மாணவத் தலைவர், சிறந்த சாரணர், சிறந்த வகுப்புத் தலைவர் உள்ளிட்ட பல மாணவர்கள் ‘அறபாவின் ஆளுமைகள்’ விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலையை மிகவும் அர்ப்பணிப்புடன் முன்னேற்றி, உயர்வான இடத்துக்குக் கொண்டு வருவதற்குத் தலைமை தாங்கி வருகின்ற அதிபர் அன்சார் அவர்களும் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
மிகவும் ரசிக்கத் தக்க கலை நிகழ்வுகளும் இவ்விழாவில் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.