நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம்
நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு, ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
இதற்கிணங்க, பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான புவனகே அலுத்விகார, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெனாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு, டிசம்பர் மாதம் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவினை, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 07ஆம் திகதி வரை பிறப்பித்திருந்தது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.