நாடாளுமன்றில் குழப்பம்: 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 01 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
பலத்த பொலிஸ் காவலுடன் நாடாளுமன்றுக்கு நுழைந்த சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவிப்பினை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் நாடாளுமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்டனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றி வளைத்ததுடன் அருந்திக பெர்ணான்டோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த பொலிஸாரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கதிரையினால் தாக்கியதாகவும், அதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ‘சிறிலங்கா மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.