அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

🕔 November 14, 2018

– முன்ஸிப் அஹமட் –

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு உளவுப் பிரிவினருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகவும் கருணா அம்மான் கூறியுள்ளார்.

தனது ‘ட்விட்டர்’ பக்கத்திலேயே இந்த விடயங்களை புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.

‘ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, விடுதலைப் புலிகளுடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என்று கூறுகின்றார். ஆனால், கொழும்பு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு உளவுப் பிரிவினருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இதை மறக்க வேண்டாம். இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன்’ என்று அந்த ‘ட்விட்டர்’ பதிவில் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 24 ஜுலை 2001ஆம் ஆண்டு பாரிய தாக்குதல் ஒன்றினை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இதில் 15 தற்கொலைப் புலிகள் கலந்து கொண்டதாக அப்போது கூறப்பட்டது.

இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலில், யுத்த மற்றும் பயணிகள் விமானங்கள் அடங்கலாக 14 விமானங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்