நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது

🕔 November 13, 2018

– அஹமட் –

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் 13 அடிப்படை உரிமை மீறல் மனுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்றைய தினமே ஆரம்பமாகின.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் மேற்படி மனுக்கள் மீதான பரிசீலமைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், குறித்த பரிசீலனைகளை இன்றைய தினம் 10 மணிவரை, நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அதற்கிணங்க, இன்று பரிசீலனைகள் ஆரம்பமான நிலையில், மாலை 5.00 மணிக்கு இந்த மனுக்கள் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

ஆயினும், 05 மணி கடந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டது.

அதில், நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத்தடை விதிப்பதாக, நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 07ஆம் திகதி வரை, இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கினை டிசம்பர் 04,05 மற்றும் 06ஆம் திகதிகளில்,  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்