07ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும்; அமைதி காக்கவும்: சபாநாயகர் கோரிக்கை
எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதி காக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற குழு அறையில் இன்று வெள்ளிக்கிழமை ஒன்றுகூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் இதனைக் கூறினார்.
தற்போதுள்ள அரசியல் குழப்ப நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, இன்று ஒன்றுகூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த போதே, அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
07ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.