கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப்

🕔 October 26, 2018
– அஸ்லம் எஸ். மௌலானா –

ல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுமபோதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

“கல்முனை என்பது முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களவர்கள் என பல்லின மக்களும் வாழும் ஒரு நகரமாகும். நான் மாநகர சபையின் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. மதம் என்பதும் கலாசாரம் என்பதும் ஒவ்வெருவருக்கும் உள்ள சுதந்திரமாகும். அதற்கு நான் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை.

கல்முனை பிரதான நகரில் பல அரச அலுவலகங்கள் மிக நீண்ட காலமாக இயங்கி வருகின்றன. இவை மக்களுக்கு சேவை செய்யும் நிலையங்களாகும். பொதுவான ஒரு அரச அலுவலகத்தில் ஆலயம் அமைப்பதற்கு ஒரு தரப்பினருக்கு அனுமதி வழங்கினால், நாளை இன்னொரு தரப்பினருக்கும் அனுமதி வழங்க  வேண்டிவரும். இது எதிர்காலத்தில் பல்வேறு இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

மாவட்ட அரசாங்க அதிபரும் நகர அபிவிருத்தி அதிகார சபையினரும் கல்முனை உப பிரதேச வளாகத்தில் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதா என விசாரணைகளை தொடுத்துள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, மாநகர முதல்வருக்கு நகரத்திலுள்ள சட்ட ரீதியற்ற கட்டடங்களை அகற்றுவதற்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில் கோவிலை அகற்றியிருக்க முடியும். ஆனால் அதனை நான் செய்யவில்லை.

கல்முனை உப பிரதேச வளாகத்தில் அனுமதி பெறப்படாமல் இந்து ஆலயம் கட்டப்பட்டுள்ளமையானது சட்டத்திற்கு முரணானதாகும். இங்கு கடமைக்கு வரும் மூவின மக்களையும் முட்டி மோதி குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு அனுமதிப்பது?

எல்லா அரச அலுவலகங்களிலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு மதஸ்த்தலம் அமைக்க முற்பட்டால் என்ன நடக்கும்? இவ்வாறான பின்னணியில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, சிலர் என்னை இனவாதியாக சித்தரிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை, தமிழ் தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னுதாரணம் எல்லோருக்கும் பொருத்தமுடையதாக இருக்க வேண்டும்.

கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர். சபை அமர்வுகளை குழப்புகின்றனர். மாநகர அபிவிருத்திகளை தடுத்து நிறுத்துகின்றனர்.

இந்நிலையில் கல்முனை வாழ் தமிழ் மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு, இன ஐக்கியத்திற்கும் இம்மாநகரின் அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்