ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்
🕔 September 12, 2015



– முன்ஸிப் –
ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு இடம்பெறுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளா என்பதைக் கண்டறிவதில், துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு, அதனை வடிவமைப்புச் செய்த ‘டனிடா’ நிறுவனத்திடம் துறைமுகங்கள் அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும், பாரிய கலடரிப்பினை தடுத்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பினையும், அதனால் ஏற்பட்டுள்ள அழிவுகளையும் நேரடியாகப் பார்வையிடும் பொருட்டு, இன்று சனிக்கிழமை, அமைச்சர் ஹக்கீம் ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின்போது – பிரதியமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான, அலிசாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் சமூகமளித்திருந்தனர்.
இதன்போது, அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்த ஒலுவில் பிரதேச மக்களும் மீனவர்களும் – கடலரிப்பின் காரணமாக, தாம் எதிர்கொண்டுவரும் பாரிய பிரச்சினைகள் குறித்து விளக்கிக் கூறினர்.
இதன்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்படி விடயங்களைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
‘ஒலுவிலில் இவ்வாறு பாரிய கடலரிப்பு இடம்பெறுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளாக இருக்கலாமா எனக் கண்டறிவதில், துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு, அதனை வடிவமைப்புச் செய்த ‘டனிடா’ நிறுவனத்திடம் – துறைமுகங்கள் அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக குறிப்பிட்டதொரு நிதியினை வழங்குமாறு, நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நிதியமைச்சிடம் நாங்களும் பேசி, இந்த ஆய்வுக்கான நிதியினை உடனடியாகப் பெற்றுக் கொடுப்பதில் முனைப்புக் காட்டவுள்ளோம்.
உண்மையில், ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்பில் ஏற்பட்ட தவறுகளினால், இந்தக் கடலரிப்பும் அழிவுகளும் ஏற்பட்டிருந்தால், இதற்கான நஷ்டஈட்டினை துறைமுகங்கள் அதிகாரசபையினர் வழங்கியே ஆகவேண்டும். இது தொடர்பில் நாம் தீர்க்கமாக பேசவுள்ளோம்.
ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் பாரதூரத்தினை, இங்கு வந்து பார்வையிட்ட போதுதான் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இன்னொருபுறம், ஒலுவில் துறைமுகம் வருமானம் ஈட்டுகின்றதொரு துறைமுகமாக இல்லை. எனவே, இந்தத் துறைமுகத்தினை முதலில் வருமானமீட்டும் துறைமுகமாக மாற்ற வேண்டும். அதற்குரிய சில திட்டங்கள் குறித்து நாங்கள் பேசி வருகின்றோம்.
ஒலுவில் துறைமுகத்துக்கு முதலீட்டாளர்களை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். கடலரிப்பினால், மக்கள் தமது தொழிலை இழந்து நிற்கின்ற நிலையில், துறைமுகத்தினை இயங்கத் செய்து, அதன் மூலம், அங்கு அவர்கள் வேறொரு தொழிலையாவது பெற்றுக் கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்’ என்றார்.


Comments



