அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு

🕔 October 5, 2018

மைச்சர் றிசாட் பதியுதீனைக் கொலை செய்து, அந்தப் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு, ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு, பிரான்ஸிலிருந்து துஷார பீரிஸ் என்பவர் பணம் வழங்கியமை தொடர்பாக, ரகசிய பொலிஸார் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக பொதுநிர்வாக சட்டமும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு பிரான்ஸிலிருந்து துஷார பீரிஸ் என்பவர் வழங்கிய பணிப்புரை மற்றும் பணம் அனுப்பப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தலைவர்களை தாக்கி தமிழ் – முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும், இது குறித்து தமிழ் -முஸ்லிம் மக்கள் பீதிகொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்த விசாராணை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறுகையில்;

நாமல் குமாரவின் வாக்குமூலங்கள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, உரையாடிய காணொளி நீதிமன்ற உத்தரவின்படி அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்தக் காணொளியில் குறிப்பிடப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட சகலரிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரது அலுவகலகம் சீல் வைக்கப்பட்டு, தேவையான சில ஆவணங்களும் பெறப்பட்டுள்ளன. அத்தோடு இது தொடர்பாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுககு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் ரகசியப் பொலிஸாரின் விசாரணை தொடர்கிறது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்