அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை: புள்ளித்திட்டம் வெளியிடாமை குறித்து முறைப்பாடு

🕔 October 4, 2018
– அஸ்லம் எஸ். மௌலானா –

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படும்போது, அது தொடர்பான விளம்பரங்களுடன் நேர்முகப் பரீட்சைக்குரிய புள்ளித்திட்டம் வெளியிடப்படாமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“கிழக்கு மாகாணத்தில் 1 ஏ.பி. தர பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் தரம்-2 பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும் ஏனைய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை வலய கல்வி அலுவலகங்களும் கோரி வருகின்றன.

இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்படும் விளம்பரங்களுடன் நேர்முகப் பரீட்சைக்குரிய புள்ளித்திட்டத்தை இணைத்து வெளியிட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரினால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கிழக்கு மாகாண தாபன விதி நடைமுறைக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான அதிபர் பதவி வெற்றிட விண்ணப்ப விளம்பரங்களில் மேற்படி புள்ளித்திட்டம் இணைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக வெளிப்படைத்தன்மை மறுக்கப்பட்டு, தெரிவுகள் மூடுமந்திரமாக வைக்கப்படுகின்றன. இதன்போது தகுதியும் திறமையும் கொண்டோர் புறக்கணிக்கப்பட்டு, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்குள்ளோர் நியமனம் பெறும் நிலை காணப்படுகிறது.

இதேவேளை தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி அமைச்சினால் கோரப்பட்ட விண்ணப்ப விளம்பரத்தில் நேர்முகப் பரீட்சைக்கான புள்ளித்திட்டம் இணைக்கப்பட்டுள்ளமையை எமது முறைப்பாட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்