மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம்
🕔 September 11, 2015




வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான், தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில், முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.
வன்னி மாவாட்டத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, வன்னி மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை இரவு, மு.காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.
மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில்நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கலந்து கொண்டதோடு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற அபிவிருத்திப் பணிகளில், மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில். ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் நாடு போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.எம். மஸ்தான் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளில், முஸ்லிம் காங்கிரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, அக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மு.காங்கிரசின் பிரதியசை்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தொளபீக், முத்தலிப் பாவா பாருக் மற்றும் மு.காங்கிரசின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


Comments



