ராஜிநாமாவை வாபஸ் பெறவில்லை; அப்படிச் செய்தால், என் கோரிக்கைகள் கேலிக் கூத்தாகி விடும்: உதுமாலெப்பை
– அஹமட் –
தேசிய காங்கிரசில், தான் ராஜிநாமா செய்த பிரதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை, மீளவும் தான் பொறுப்பேற்கவில்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.
கடந்த 20ஆம் திகதி தான் ராஜிநாமா செய்த பதவியை, 05 நாட்கள் கழிவதற்குள் மீண்டும் ஏற்றுக் கொண்டால், தனது ராஜிநாமாவும், அதனை முன்னிறுத்தி வைத்த கோரிக்கைகளும் கேலிக் கூத்தாகி விடும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, நேற்றைய தினம் – தான் சந்தித்து பேசிய போது, ராஜிநாமா செய்த பதவியை மீண்டும் பொறுப்பேற்குமாறு, தான் வலியுறுத்தப்பட்டதாகவும் உதுமாலெப்பை கூறினார்.
தனது கோரிக்கைகளுக்கு முழுமையான நியாயம் கிடைக்கும் வரையில், தான் ராஜிநாமா செய்த பதவி மற்றும் பொறுப்புக்களை மீளவும் கையேற்கப் போவதில்லை என்றும் இதன்போது உதுமாலெப்பை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.