‘பெரிய’ அமைச்சரவை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி அதிருப்தி

மேலும், இவ்வளவு பெரிய அமைச்சரவை எதற்காக என்று தனக்குப் புரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், நேற்று வியாழக்கிழமை கலகம அத்ததாஸ்ஸி தேரரை சந்தித்து ஆசிபெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இவ்வளவு பெரிய தொகை அமைச்சர்களை நியமிப்பது குறித்து என்னால் திருப்தி அடைய முடியாது. புதிதாக நியமிக்கப்பட்ட சில அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உண்டு. எனினும், உங்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை சந்தோசமான விடயமாகும். அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென கூறும் உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.
அந்தக் காலத்தில் டி.எஸ். சேனாநாயக்க உள்ளிட்ட தலைவர்கள் செயற்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி அடைய முடியும்.
சேனாநாயக்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை. எனினும் அவரிடம் சிறந்த அறிவாற்றல் காணப்பட்டது. ராமநாதன், பொன்னம்பலம், டி.பி. ஜாயா போன்ற தலைவர்களுடன் டி.எஸ்.சேனாநாயக்க மிக நெருக்கமாக செயற்பட்டார்” என்றார்.