கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ்

🕔 September 24, 2018

– முகம்மட் றியாஸ் –

ரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ்  தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் உரையாற்றிய அவர்; கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

பிரதியமைச்சரின் இந்தக் கருத்து, அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது என்று, சிரேஷ்ட  ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த 30 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் அண்மையில்,  வவுனியா மற்றும் மன்னார் பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக, அங்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது மன்னாரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரிஷாத்பதியுதீன்; “இங்கு வந்து வடபுல முஸ்லிம்களின் நிலைமைகளை நேரில் கண்டு, எமது சமூகத்துக்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க முன்வந்துள்ளமை  எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் கரையோர மாட்டத்தைப் பெறுவதற்கும், அரசியலுக்கு அப்பால் நின்று ஊடகவியலாளர்கள் இணைந்து சாத்வீக போராட்டமொன்றினை முன்னெடுக்க வேண்டும்.

அம்பாறையில்தான் முஸ்லிம்களுக்கென்று ஒரு மாவட்டத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது. கரையோர மாவட்டத்தை வென்றெடுப்பது, ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் மகிழ்சியானதாக அமையும். எனேவே, இந்த  அரசியல் கோரிக்கையை வென்றெடுக்க, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களாகிய நீங்கள் ஒன்றிணைந்து செயற்பட  வேண்டும்” என்றார்.

இந்தக் கோரிக்கைக்கு  வலுச்சேர்க்கும் விதமாகவே, பிரதியமைச்சர் ஹரீஸ், இன்று வெளியிட்டுள்ள கருத்துக்கள் அமைந்திருந்ததாக, பிரதியமைச்சரின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்