இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து

🕔 September 21, 2018

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசில் வகித்து வந்த பிரதி தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்துள்ள நிலையில்;  “இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதில்லை” என்று, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், கூலிக்கு எழுதும் சில ஊடகவியலாளர்கள்தான், இந்த விடயத்தை இவ்வாறு சிந்தித்துப் பெரிதுபடுத்தி, கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பருக்கு நேற்று வியாழக்கிழமை இரவு தொலைபேசி ஊடாக வழங்கிய பேட்டியொன்றிலேயே, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த பேட்டியின் முழுமை – வருமாறு;

கேள்வி: உங்கள் கட்சியின் முக்கியஸ்தரான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து திடீரென ராஜினாமச் செய்துள்ளாரே?

பதில்: ஆம், அவரது கடிதம் தற்போதுதான் (இரவு) கிடைத்துள்ளது. அவர் கட்சியின் பொறுப்புகளிலிருந்து மட்டும்தான் ராஜினாமாச் செய்துள்ளாரே தவிர, கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகவில்லையே?

கேள்வி:  எவ்வாறு இருப்பினும் இந்த ராஜினாமாவின் பின்னணியில் அரசியல், கருத்து முரண்பாடுகள் உள்ளதாக  நானும் நினைக்கிறேன்.

பதில்: நீங்களோ மற்றவர்களோ அவ்வாறு நினைப்பதற்கு நான் என்ன செய்வது

கூலிக்கு எழுதும் சில ஊடகவியலாளர்களே இந்த விடயத்தை இவ்வாறு சிந்தித்துப் பெரிதுபடுத்தி தொண்டர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஆனால், இந்த விடயத்தை நாங்கள் அரசியல், கருத்து முரண்பாடு கொண்ட  ஒரு பிரச்சினையாகப்  பார்க்கவில்லை. அவ்வாறு பார்ப்பதற்கு எதுவும் நடக்கவும் இல்லை. தனிப்பட்ட காரணங்களால்தான் குறித்த பொறுப்புகளிலிருந்து அவர் ராஜினாமாச் செய்வதாக   அறிவித்துள்ளார்.

ஆனால், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமாச் செய்யவில்லை.

கேள்வி: அவரின் ராஜினாமா என்பது சாதாரணமாக நடந்த ஒன்று அல்ல என மற்றவர்கள் நினைப்பது போல் நானும் கருதுகிறேன்.  அதாவது ‘திடீர்’ ராஜினாமா  என்றால் அது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில்தான் பெரும்பாலும் நோக்கப்படும் என்பதே எனது கருத்தாகவும் உள்ளது.

இருப்பினும், உங்கள் நிலைப்பாட்டுடன் ஒன்றித்தவனாக ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன்.

அதாவது, தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் தனது பொறுப்புகளை ராஜினாமாச் செய்தார் என்றால், அது தொடர்பில் உங்களுடன்   நேரிலோ  தொலைபேசியிலோ கலந்துரையாடிய பின்னர் அவர் தனது ராஜினாமாவை அறிவித்திருக்கலாம்.

ஆனால், அவ்வாறு இந்த விவகாரம் நடைபெறவில்லையே? உதுமாலெப்பை  தனது முக்கிய பதவிகளை ராஜினாமாச் செய்தவுடன் ஊடகங்களுக்கு முதலில் அறிவித்து விட்டே உங்களுக்கு உத்தியோகபூர்வமான தனது கடிதத்தை அனுப்பியுள்ளாரே? இப்போது என்ன கூறப் போகிறீர்கள்?

பதில்: ஒவ்வொருவரது மனநிலையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு செயற்படும் எவ்வாறு செயற்பட வைக்கும் என்பது சந்தர்ப்பங்களையும் மனிதர்களையும் பொறுத்த விடயம். சில நேரம் – கடிதம் மூலம் அறிவிப்போம் என்று சிந்திக்கலாம். அவ்வாறின்றி தமது முடிவை நேரடியாகே அறிவிப்போம் என்றும் சிந்திக்கலாம். அது ஒவ்வொரு மனிதர்களின் இயல்பை பொறுத்தது.

கேள்வி:  அவ்வாறாயின் குறித்த பொறுப்புகளை தேசிய காங்கிரஸின் மகாநாட்டின் போது  நீங்கள் எம்.எஸ். உதுமாலெவ்வைக்கு  வழங்க ஆலோசித்த போது, அவருடன் இது குறித்து கலந்துரையாடிய போது, அவற்றைத் தன்னால் ஏற்றுச் செயற்படுவதில் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகள், காரணங்களை உங்களிடம் கூறி  அவற்றை அவர் அன்றே ஏற்றுக் கொள்ளாமல் விட்டிருக்கலாம்தானே?

ஆனால் அவ்வாறும் அவர் செய்யவில்லையே? இவை எல்லாம் குறுகிய காலத்துக்குள் இடம்பெற்ற சம்பவங்கள்தானே?

பதில்: ஆம், அவ்வாறு அவர் அன்று கூறவில்லைதான். அவர் அப்போது பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்தான்.  ஆனால் இப்போது அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவிகளை ராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.  ஆனால், இது ஒரு பிரச்சினை இல்லை.

கேள்வி: உங்களுக்கும் உதுமாலெப்பைக்குமிடையிலான  முரண்பாட்டின் விளைவே இந்த ராஜினாமா என நான் கருதுகிறேன். வெளியிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பதில்: விமர்சனங்கள், பார்வைகள் வெளியிலிருந்துதான் எழுகின்றன. உள்ளே அப்படியல்ல. முரண்பாடுகளுடன் அவர் வெளியேறுவதற்கு தேசிய காங்கிரஸுக்குள் உதுமாலெவ்வைக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி:  இதேவேளை, எம்.எஸ். உதுமாலெவ்வை என்ற சிரேஷ்ட அரசியல்வாதி  கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்தோ அல்லது முற்று முழுதாக கட்சியிலிருந்தோ விலகிச் செல்லும் போது, அது கட்சிக்குப் பாரிய பின்னடைவை  ஏற்படுத்த மாட்டாதா?

பதில்: உதுமாலெப்பை என்பவர் கட்சியின் ஆரம்பப்  போராளி. கட்சியின் பல உயர் பதவிகளைப் பெற்று நம்பிக்கையுடன் செயற்பட்ட ஒருவர். எனவே, இவ்வாறானவர்கள்  கட்சியிலிருந்து விலகுவது, இணைவது என்பதெல்லாம் இந்தக் கட்சிக்கு மட்டும் உரித்தான விடயம் அல்ல.

எனவே,  இந்த விடயத்தை தேசியக் காங்கிரஸுக்கு மட்டும் உரித்தான ஒரு விடயமாகப் பார்க்கத்  தேவை இல்லை.

மேலும் இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதும் இல்லை.

கட்சியின் வளர்ச்சி என்பது போராளிகளின், ஆதரவாளர்களின் கைகளில்தானே உள்ளது. மேலும், எமது கட்சியிலிருந்து உதுமாலெப்பை முழுமையாக வெளியேறாத நிலையில் இது தொடர்பில் பெரிதாக எதனையும் கூறவும் தேவை இல்லைதானே? எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்