யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு

🕔 September 20, 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜிநாமா செய்யுமாறு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரை இரண்டு வாரங்களுக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவித்துள்ளதாக, இன்று வியாழக்கிழமை  காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையிலேயே, அவ்வாறான அறிவித்தல்கள் எவையும் கிடைக்கவில்லை என்று, பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்வதற்கான காரணங்கள் எவையும் இல்லை என்றும், பொலிஸ் மா அதிபர் எந்தவித தவறுகளையும் செய்யவில்லை எனவும் அவரின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மேற்படி ராஜிநாமா செய்தியானது, ஊடக நிறுவனமொன்றின் கற்பனைக் கதை எனவும் பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், நாலக சில்வா எனும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர், ஜனாதிபதியை கொல்வதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என, செய்திகள் வெளியாகியமையினை அடுத்து, பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியை கொல்வதற்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்பவர், பொலிஸ் மா அதிபரின் நெருங்கிய சகா என, ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments