ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பாலுறவு கொள்வது, சட்டப்படி குற்றமாகாது என, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்,” என்று இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377 கூறுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் உள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் சட்டப்பிரிவு 377 இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதாக உள்ளதால் அதை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. எனினும், அப்பிரிவு செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் 2013இல் தீர்ப்பளித்தது.
இதனிடையே அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 2017இல் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த சட்டத்தை நீக்கும் வகையில் தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வாசித்தனர். அதே சாராம்சம் கொண்ட தனித்தனி தீர்ப்புகளை நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஆர்.ஒய்.சந்திரசூத், இந்து மல்கோத்ரா ஆகியோர் வாசித்தனர்.
இன்றைய தீர்ப்பால் 2013இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு இனிமேல் செல்லாது.
தீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர் தங்கள் தீர்ப்பில் ”நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல” என கூறினர்.
மேலும், “ஒருவரின் சுய கருத்தை வெளியிடுவது தடை செய்யப்படுமானால் அது மரணத்திற்கு போன்றது. சமத்துவம் என்ற கம்பீரமான கட்டடத்தின் மீதே மற்ற எல்லா கம்பீரமான கட்டடமும் சாய்ந்திருக்கிறது. நமக்குள் உள்ள வேற்றுமையின் பலத்தை நாம் மதிக்க வேண்டும். பொறுமையும், ஒருவரின் உரிமைக்கு மரியாதை அளிக்கவும் வேண்டும். ஒருவர் எதுவாக இல்லையோ, அதை அவர்கள்மீது திணிப்பதைவிட ஒவ்வொருவரிடம் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற மனிதர்களைப்போலவே, இயல்பான மனிதர்களாகவும் அடிப்படை உரிமைகளுடனும் இருக்கும் உரிமை எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது.மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது குற்றமே.” என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின்படி விருப்பம் இல்லாத ஒரே பாலினத்தவரை வற்புறுத்தியோ, மிரட்டியோ பாலுறவு கொள்வது, குழந்தைகள் மற்றும் விலங்குகளுடன் பாலுறவு கொள்வது ஆகியன தொடர்ந்து சட்டவிரோதமான குற்றங்களாகவே இருக்கும்.
இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வெளியானபின் உச்ச நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பாலின சிறுபான்மையினர் குழுக்களை (LGBT) சேர்ந்தவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆரவாரமாக குரல் எழுப்பியும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அக்டோபர் 2017ஆம் தேதி வரையிலான தகவலின்படி நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நோர்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதாக உள்ளது . பிற நாடுகளில் அது சட்டவிரோதமானது.