ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி

🕔 September 5, 2018

ப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இது கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளியாகும்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையைக் கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் கடும் மழை பெய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் கடலில் மிக பெரிய அலைகள் எழுந்து வரும் நிலையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளியால் பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகளில் இருப்போரை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று உள்ளூர் நேரப்படி பகல் 12 மணி அளவில் ஷிகோகோ தீவில் இந்த சூறாவளி கரையை கடந்தது. பின்னர், இந்த சூறாவளி ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹான்ஷுவை நோக்கி முன்னேறியுள்ளது.

எவ்வாறாயினும் வட திசையில் முன்னேறியுள்ளதால், இனி இந்த சூறாவளி வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

”மிகவும் சக்திவாய்ந்தது” என்று ஜப்பான் நாட்டின் வானிலை மையத்தால் முதன்முதலில் வகைப்படுத்தப்பட்ட ஜெபி சூறாவளி, 1993ஆம் ஆண்டில் ஜப்பானின் முக்கிய தீவுகளை தாக்கி 48 பேர் இறக்க காரணமான சூறாவளிக்கு பிறகு, சீற்றம் அதிகமுள்ளதாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சூறாவளி பாதிப்பால் நாட்டில் நூற்றக்கணக்கான விமான, ரயில் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒசாகாவில் உள்ள கான்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்