ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி

🕔 September 4, 2018

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை செலுத்திவிட்டு உங்களால் எட்டுபேருக்கு இரவு பகல் என்று சமைக்கவும் முடியுமா? ஆம், முடியும். நீங்கள் காலை 05 மணிக்கு எழுந்தால், உங்கள் பெயர் தாட்சாயினியாக இருந்தால்.

தாட்சாயினி இந்திய விண்வெளி கழகத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி வழிகாட்டுதல் துறையின் முன்னாள் தலைவியாவார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும் உள்ள இவரிடம் பேசினோம்.

இவர்கள் ரொக்கெட் பெண்கள் என்றும் செவ்வாயிலிருந்து வந்த பெண்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். நான்கு வருடங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக செலுத்தியதன் வெற்றியை புடவைக் கட்டி தலையில் பூ வைத்தவாறு இயல்பாக காட்சியளித்த பெண்கள் கொண்டாடும் புகைப்படம் பெரும் பாராட்டுகளை பெற்றது. அதில் ஒருவர்தான் தாட்சாயினி.

செயற்கைக்கோளை கண்காணிக்கும் தலைவராக தாட்சாயிணி பொறுப்பேற்றிருந்தார். செயற்கைக்கோள் அதன் சுற்று வட்ட பாதையில் சரியாக செல்கிறதா என்பதை இவரின் குழு கண்காணிக்க வேண்டும். மேலும், அது எங்கே செல்கிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

இது கடினமாக வேலை. அதுவும் இந்தியாவில் திருமணமான பெண்ணுக்கு இது மேலும் கடினமானது. ஆனால் பாரம்பரிய, பழமைவாத குடும்பத்தில் இருந்து வந்த இவர், அறிவியலில் கால்பதிக்க வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்துவிட்டார்.

கர்நாடகாவின் பத்ராவதி என்ற நகரத்தில் 1960களில் தனது சிறு வயதினை கழித்தார் தாட்சாயினி. அப்போதே அவரது ஆர்வத்தை ஊக்குவித்தார் அவரது தந்தை. அந்த நகரத்தில் பொறியியல் படித்த ஒரே ஒரு பெண் இருந்தார். அவரை பார்க்க எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பார் தாட்சாயினி.

அக்காலத்தில் எல்லாம் பெண்களை படிக்க வைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது. பல்கலைக்கழகம் சென்று படிப்பதே அபூர்வம். ஆனால், கணக்காளரான தாட்சாயினியின் தந்தை, தன் மகள் படிக்க வேண்டும் என்றே விரும்பினார். பொறியியல் படிப்பில் சேர்ந்த அவர், முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

தாட்சாயினி பின்பு முதுகலை படிப்பும் படித்து முடித்து, கணித ஆசிரியராக கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள்கள் குறித்த ஆர்வம் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது.

ஒருநாள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி குறித்து விளம்பரம் பார்த்து அதற்கு விண்ணப்பிக்க அவருக்கு வேலையும் கிடைத்தது.

1984ஆம் ஆண்டு. சுற்றுப்பாதை இயக்கியவியலில் பணியில் அமர்த்தப்பட்டார் தாட்சாயினி. தற்போது அத்துறையில் அவர் வல்லுநர். ஆனால், அதுகுறித்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ளவே அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.

கணினியில் ப்ரோக்ராம் செய்யும் பணியும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு சிறிய சிக்கலும் இருந்தது. தாட்சாயினி இதற்கு முன்பாக கணினியையே பார்த்ததில்லை.

அக்காலத்தில் அனைவரிடமும் கணினி எல்லாம் இருந்துவிடவில்லை. ஆனால், தாட்சாயினியிடம் புத்தகங்கள் இருந்தன. தினமும் பணி முடித்து வீடு சென்றதும் கணினி ப்ரோக்ராமிங் குறித்து படித்து தெரிந்து கொள்வார்.

இஸ்ரோவில் பணி செய்யத் தொடங்கிய ஓராண்டில் இவருக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான மஞ்சுநாத் பசவலிங்கப்பாவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு, திடீரென பார்த்துக் கொள்ள ஒரு குடும்பம் இருக்கும் சூழல் உருவானது.

அலுவலகங்களில் செயற்கைக்கோள்களை வழிநடத்த கணினி நிரலாக்கம் செய்வார். வீட்டில் தனது மாமியார், மாமனார், கணவரின் உடன் பிறந்தவர்கள் 05 பேரென அவர்களை பார்த்துக் கொள்வார். விரைவிலேயே அவருக்கு 02 குழந்தைகளும் பிறந்தன.

“நான் காலை 05 மணிக்கு எழுவேன். ஏனெனில் நான் ஏழெட்டு நபர்களுக்கு சமைக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல” என்று கூறுகிறார் தாட்சாயினி. “அதுவும் சப்பாத்தி உண்ணுவதுதான் வீட்டில் பழக்கம் என்பதால் அத்தனை பேருக்கும சப்பாத்தி சமைத்துவிட்டு அலுவலகம் செல்வேன்”.

அலுவலகத்தில் பணிக்கிடையில் நேரம் கிடைத்தால் குழந்தைகளை பற்றி விசாரிக்கும் அவர், மீண்டும் மாலை வீடு திரும்பியவுடன் சமைக்க வேண்டும்.

இவை மிகவும் கடினமாக இருந்ததாக ஒப்புக்கொள்கிறார் தாட்சாயினி.

“நான் வேலையை விட்டு விடுவேன் என்று சில உறவினர்கள் நினைத்தனர். ஆனால் நான் அவ்வளவு எளிதாக எதையும் விட்டுக்கொடுக்கும் நபர் இல்லை” என்கிறார் அவர்.

சில சமயங்களில் நள்ளிரவு 01 அல்லது 02 மணிக்குதான் உறங்க போக முடியும் என்றாலும் காலை 04 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவதாக கூறுகிறார்.

ஆனால் தாட்சாயினி எந்த புகாரும் கூறவில்லை. அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளை குறித்து பேசும்போது அவர் குரல் முழுக்க உற்சாகம் நிறைந்திருக்கிறது.

அவருக்கு சமைக்க மிகவும் பிடிக்கும் என்பதால் அதை விரும்பி செய்கிறார்.

“வீட்டில் சமைப்பதும், அலுவலகத்தில் கோடிங் செய்வதும் ஒன்று போலதான். ஒரு சிறு பிழை என்றாலும் முடிவு எண் மாறிவிடும். அதேபோல, சமையலில் ஒரு பொருள் மாறினாலும் வேறு சுவையை தந்துவிடும்”.

“ஆரம்பத்தில் நான் என்ன வேலை பார்க்கிறேன் என்றே என் கணவருக்கு தெரியாது. நான் சனிக்கிழமை கூட அலுவலகம் செல்வேன். நான் ஒழுங்காக பணி செய்யாததால்தான், சனியன்று அலுவலகம் செல்கிறேன் என்று அவர் நினைத்துக் கொண்டார்” என்று கூறுகிறார் தாட்சாயினி.

பின்புதான் செயற்கைக்கோள்கள் குறித்த நேரத்தில் அவர் வேலை பார்ப்பதாக கணவர் பசவலிங்கப்பா புரிந்து கொண்டார். தற்போது தன் மனைவியை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறார் அவர்.

பாரம்பரிய இந்திய குடும்பத்தில், வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்தான் செய்ய வேண்டும் என்றுள்ளது. தாட்சாயினி மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

பணி ஓய்வுக்கு பிறகுள்ள திட்டங்கள் குறித்து கேட்டதற்கு, அது குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்று கூறுகிறார். செவ்வாய் கிரகம் குறித்து மேலும் படிக்க விரும்புகிறார் அவர்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments