பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

🕔 August 26, 2018

லகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்?

பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது ஒர் கற்பனையான அற்புத உலகத்தைக் குறிக்கிறது. அதுபோல ஸாநாடு என்பது பெரும் கம்பீரமும் அழகும் அமைந்த ஒரு கற்பனைப் பகுதியைக் குறிக்கிறது. அந்தக் கற்பனைப் பகுதியைத்தான் நிஜமாக்கித் தன் வீட்டுக்குப் பெயராகவும் வைத்திருக்கிறார் பில் கேட்ஸ்.

பில் கேட்ஸ் ஏழு வருடங்கள் செலவழித்து வாஷிங்டன் ஏரிக்கு எதிராகத் தனது இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்.

மெடினா என்ற இடத்தில் உள்ளது பில் கேட்ஸின் வீடு. 66,000 சதுர அடி பரப்பளவில் அமைந்த மாளிகை. 2009-ல் இதற்காக அவர் கட்டிய சொத்து வரி 106 கோடி அமெரிக்க டொலர். வெளியிலிருந்து பார்த்தால் வீடு முழுவதுமாகத் தெரியாது. காரணம் பல மரங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. 2,500 சதுர அடியில் ஒரு ஜிம் உண்டு. உணவு அறையின் பரப்பளவு 1,000 சதுர அடி.

படுக்கை அறைகள் எவ்வளவு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஏழே ஏழுதான். “முப்பது, நாற்பது படுக்கை அறைகளை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?” என்று பில் கேட்ஸின் மனைவி ஒரு முறை சிரித்துக் கொண்டே கேட்டதாகச் செய்தி வெளியானதுண்டு. ஆனால் 24க்கும் அதிகமான குளியலறைகள் கொண்ட வீடு இது. அவற்றில் 10 குளியலறைகளில் குளியல் தொட்டிகள் உள்ளன. வரவேற்பு அறையில் 200 பேர் வரை உட்காரலாம். 22 அடியில் வீடியோ திரை ஒன்று அதன் ஒரு சுவரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

அறைகளில் உள்ள வெப்ப நிலை ஒரு உயர்தர சென்ஸார் அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 60 அடி நீளம் கொண்ட நீச்சல் குளம். நீருக்குள்ளேயே மியூசிக் சிஸ்டம் உண்டு. இந்த நீச்சல் குளத்தில் கண்ணாடிச் சுவர் ஒன்று இருக்கிறது. அதற்குக் கீழே நீச்சலடிக்கச் சென்றால் மேல் மாடியை அடைந்து விடலாம்.

கீழ்த்தளத்தில் கார்களை நிறுத்தப் பல இடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றில் 10 கார்களை நிறுத்தலாம். கான்க்ரீட், எவர்சில்வர் ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்டிருக்கிறது இந்தப் பகுதி மட்டும் வெகு ரகசியமானதாம்.

ஒரு விருந்தாளி பில் கேட்ஸின் மாளிகைக்குள் நுழைந்து விட்டால், அவருக்கு ‘பின்’ ஒன்றைக் கொடுப்பார்கள். அதைக் கொண்டு அவர்கள் சென்ஸார்களை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த மாளிகையை உருவாக்க 300 கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் 100 பேர் எலக்ட்ரீஷியன்கள்.

ட்ராம்போலின் என்பது எலாஸ்டிக் தன்மையுடைய பெரியவர்களும் ஆடக் கூடிய ஒன்று. ஸ்பிரிங் தன்மை கொண்ட இதில் வெகு உயரத்துக்கு குதித்து குதித்து விளையாடலாம். பில் கேட்ஸின் வீட்டில் இது வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் அதற்கு 2,500 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீட்டில் உள்ள நூலகத்தில் நிறைய புத்தகங்கள் உள்ளன. இதில் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்ஸி வரைந்த ஒரு ஓவியத்தை 30.8 மில்லியன் டொலர் விலை கொடுத்து வாங்கி மாட்டியிருக்கிறார் பில் கேட்ஸ். லியனார்டோ டாவின்ஸியின் கையெழுத்துப் பிரதி ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறாராம்.

ஜில்லோ என்ற ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனம் அந்த வீட்டின் மதிப்பு 18 கோடி டொலர் என்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்