ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி
🕔 May 27, 2015
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மகளை 07 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய ஒபாமாவின் குடும்பத்துக்கு 50 மாடுகள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30 வெள்ளாடுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கென்ய சட்டத்தரணியொருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமாவின் மூத்த மகள் மலியாவுக்கு 16 வயதாகிறது. இவரை கடந்த 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக பார்த்ததாகவும், அப்போது முதல் அவரை காதலித்து வருவதாகவும் கென்ய சட்டத்தரணியான ஃபிலிக்ஸ் கிப்ரோனோ என்பவர், ‘தி நைரோபி’ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒபாவின் மகளை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது. எனது வாழ்க்கையில் இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் நான் காதலித்ததில்லை. அதனால் மலியாவுக்கு உண்மையாக இருப்பேன். இது தொடர்பாக ஜனாதிபதி ஒபாமாவுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்.
அத்துடன், ஒபாமா கென்யா வரும்போது, மலியாவையும் உடன் அழைத்து வர வலியுறுத்த உள்ளேன். அவர் இதற்கு ஒப்புக் கொண்டால், நான் எனது காதலை மலியாவிடம் தெரிவிப்பேன். அத்துடன் ஜனாதிபதி ஒபாமாவுக்கு 50 மாடுகள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30 வெள்ளாடுகளைக் கொடுப்பேன்.
மலியாவிடம் தற்கால முறைப்படி ஷாம்பேயின் வைனுடன் விருப்பத்தைத் தெரிவிக்கப் போவதில்லை. பாரம்பரிய முறைப்படிதான் எனது விருப்பத்தை வெளிப்படுத்துவேன். திருமணத்துக்குப் பின்னர் மலியாவுக்கு பால் கறக்கவும், சோளக் கஞ்சி செய்யும் கெலேஞ்சின் பெண்களின் பாரம்பரியம் குறித்தும் கற்றுக் கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.