ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல்

🕔 May 27, 2015
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டுள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மொசாம்பிக்கில் இருக்கும் வேட்டைக்காரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டின் யானைகளில் சரிபாதியானவற்றை கொன்று அழித்திருப்பதாக, அமெரிக்காவில் இருந்து இயங்கும் வனஉயிரிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

வானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பின்படி, மொசாம்பிக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 20,000 யானைகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், தற்போது அந்தத் தொகையானது,  10 ஆயிரமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மொசாம்பிக்கின் வடபகுதியில் இந்த பாதிப்பு கூடுதலாக இருப்பதாக கூறும் இந்த அமைப்பு, அங்கிருந்த யானைகளில் 95 சதவீதமானவை கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறது.

அண்டைநாடான தான்சானியாவில் இருந்த யானைகளை பெருமளவு வேட்டையாடி அழித்துவிட்டு, அங்கிருந்து மொசாம்பிக்குக்கு வந்திருக்கும் வேட்டைக்காரர்கள்தான் – இந்த யானைகளின் கொலைகளுக்குக் காரணம் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகளின் தந்தங்கள் ஆசியநாடுகளில் விலை மதிப்புமிக்க தந்தச் சிலைகள், நகைகளாக உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அந்த தந்த வர்த்தகமே யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆபிரிக்கா முழுமையிலும் ஆண்டுக்கு 30,000 யானைகள் கொல்லப்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்