கல்முனை மாநகர சபைக்குரிய கூட்டத்தில், உத்தரவு பிறப்பித்த ரஊப் ஹசீர்: கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை?
– அஹமட் –
கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஹசீர் என்பவர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் கூட்டம், மருதமுனையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள்அமைச்சின் மேலதிக செயலாளர் முகம்மட் நபீல் முன்னிலை வகிக்க, மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி எம்.ஏ. றக்கீப் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இங்கு பிரதியமைச்சர் பைசால் காசிம், கல்முனை மாநகர சபையின் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. நௌசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆனாலும், இதனுடன் எவ்வகையிலும் சம்பந்தப்படாத ரஊப் ஹசீர் என்பவர், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவு விடுக்கும் தோரணையில் எவ்வாறு பேச முடியும் என கேள்விகள் எழுந்துள்ளன.
ரஊப் ஹக்கீம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவி வகித்த எக்காலத்திலும், ஹக்கீமின் கீழ் எந்தப் பதவியையும் தான் வகிக்கவில்லை என்றும், எந்த வருமானத்தினையும் ஹக்கீமுடைய பதவியைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், சில காலங்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் ரஊப் ஹசீர் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தமை இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.
ஹசீருடைய அந்தக் கூற்றின் படி, அவர் தனது சகோதரான ஹக்கீமுடைய அமைச்சின் கீழ் எந்தவித பதவியையும் பெற்றுக் கொள்ள மாட்டார் என்பதை ஊகிக்க முடிகிறது.
அப்படியென்றால், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் என்கிற அடையாளத்தைப் பயன்படுத்தி, ஓர் உத்தியோகபூர்வ கூட்டத்தில் ஹசீர் கலந்து கொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவுகளை எவ்வாறு பிறப்பிக்க முடியும் என்று, பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.
கட்சியை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்ட ஹக்கீம் குடும்பம், தற்போது அதற்கு அப்பாலும் தங்கள் ஆதிக்கத்தை பகிரங்கமாக செலுத்துவதற்கு முயற்சிக்கின்றமையின் வெளிப்பாடுதான், மேற்படி கூட்டத்தில் ஹசீர் கலந்து கொண்டமையாகும் என, ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்த, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட அரசியல்வாதியொருவர்; “கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை” எனவும் கேள்வியெழுப்பினார்.