டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை
வடக்கு மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கப்பட்டமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரனை நீக்கியமைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அவரிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக டி சில்வா ஆகியோரின் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த இடைக்கால தடை அமுலில் இருக்கும் என, குறித்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியமை தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த 11 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், அன்றைய தினம், நீதியரசர்களில் ஒருவர் விடுப்பிலிருந்தமையால், அது மீண்டும் ஜூன் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினமும் அந்த மனு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.